ராஜஸ்தானில் முதல்வர் பதவிக்கான ரேஸில் பாஜகவை சேர்ந்த 7 பேர் உள்ளனர்
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீழ்த்தி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் முதல்வர் வேட்பாளரை அக்கட்சி இன்னும் அறிவிக்கவில்லை. ராஜஸ்தானில் முதல்வர் யார் என்பதை பாஜக தேசிய தலைமை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ராஜஸ்தானில் முதல் பதவிக்கான ரேஸில் அக்கட்சியை சேர்ந்த 7 பேர் உள்ளனர்.
வசுந்தரா ராஜே
undefined
ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே. இவர் அக்கட்சியின் மாநில முகமாக அறியப்படுகிறார். 70 வயதான அவர் மாநிலத்தில் இரண்டு முறை பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். பாஜக நிறுவனர்களில் ஒருவரான, விஜயராஜே சிந்தியாவின் மகளும், மறைந்த காங்கிரஸ் தலைவர் மாதவராவ் சிந்தியாவின் சகோதரியுமான வசுந்தரா ராஜே, 1984 ஆம் ஆண்டு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகவும், அதன் இளைஞர் பிரிவின் துணைத் தலைவராகவும், தோல்பூரில் இருந்து எம்எல்ஏவாகவும் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்
மக்களவைக்கு ஐந்து முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்துள்ளார். 2003ஆம் ஆண்டில் மாநில அரசியலுக்கு திரும்பிய அவர், இரண்டு முறை ராஜஸ்தான் முதல்வராக இருந்துள்ளார்.
கஜேந்திர சிங் ஷெகாவத்
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தார். அக்கட்சியின் அனைத்து அதிருப்தி முகங்களையும் அவரால் ஒன்றிணைக்க முடிந்தது. அவர் சஞ்சீவனி கடன் கூட்டுறவு சங்க ஊழல் தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட்டுடன் பகிரங்கமாக மோதலில் ஈடுபட்ட அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நெருக்கமானவர்.
2019 பொதுத் தேர்தலில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டை தோற்கடித்ததன் மூலம் தனது அரசியல் வலிமையை உறுதிப்படுத்திய அவர், வசுந்தரா ராஜே மற்றும் பாபா பாலக்நாத் ஆகியோருக்கு அடுத்து முதல்வர் பதவிக்கான மூன்றாவது சிறந்த தேர்வுகளில் ஒருவராக இருப்பதாக சில கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
தியா குமாரி
ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த தியா குமாரி, 2013 இல் பாஜகவில் இணைந்ததிலிருந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். 2019 பொதுத் தேர்தலில் 5.51 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியுடன் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
'ஜெய்ப்பூர் மகள்' என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்படும் அவர், முதலில் வெளிநாட்டவராக கருதப்பட்டார், ஆனால், அவரது சவாய் மாதோபூர் தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் காரணமாக அவர் படிப்படியாக முக்கியத்துவம் பெற்றார்.
பாபா பாலக்நாத்
ஆன்மீகத் தலைவரும் அல்வார் எம்பியுமான பாபா பாலக்நாத். ராஜஸ்தானின் யோகி என்று பிரபலமாக அழைக்கப்படுபவர். முதல்வர் பதவிக்கான ரேஸில் இருக்கும் இவர், ராஜஸ்தானின் சாதிய விஷயங்களை களைந்து வலுவான இந்துத்துவா தலைவராகக் கருதப்படுகிறார். திஜாரா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள 40 வயதான இவர், சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர். வேட்பாளர் இம்ரான் கானுக்கு எதிரான தனது போட்டியை இந்தியா-பாகிஸ்தான் போட்டியுடன் ஒப்பிட்டு பேசியவர் இவர்.
அர்ஜுன் ராம் மெக்வால்
வலுவான நிர்வாகப் பின்புலம் கொண்ட அர்ஜுன் ராம் மெக்வால் மத்திய சட்டத்துறை அமைச்சராக உள்ளார். பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசாங்கத்திற்கான தளத்தை நிர்வகிப்பதற்கும், அரசாங்கம் நிறைவேற்ற விரும்பும் ஒவ்வொரு மசோதாவிற்கும் ஆதரவாளர்களைத் திரட்டுவதற்கும், அது ஒரு சட்டமாக மாறுவதற்குத் தேவையான எண்ணிக்கையை உறுதி செய்வதற்கும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். பிரதமர் மோடியின் நம்பிக்கைக்கு உரியவராகவும், கட்சியின் முக்கிய தலித் முகமாகவும் அர்ஜுன் ராம் மெக்வால் உள்ளார்.
மிக்ஜாம் புயல்: தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்!
கிரோடி லால் மீனா
ராஜஸ்தான் மாநிலத்தில் மீனா சமூக வாக்குகளை கவரும் பொருட்டு பாஜக மூத்தவரான கிரோடி லால் மீனா களமிறக்கப்பட்டார். கிழக்கு ராஜஸ்தானில் கட்சியின் செயல்திறனைப் பார்க்கும்போது, 72 வயதான அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக தெரிகிறது. "டாக்டர் சாகேப்" மற்றும் "பாபா" என்று பிரபலமாக அறியப்படும் கிரோடி லால் மீனா, ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கான முன்னணி வேட்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
சிபி ஜோஷி
ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரான சிபி ஜோஷி, முதல்வர் பதவிக்கு வலுவான போட்டியாளராகக் கருதப்படுகிறார். 48 வயதான அவருக்கு இந்த மார்ச் மாத தொடக்கத்தில் மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அம்மாநிலத்தில் போட்டிப் பிரிவுகளை ஒன்றிணைத்து, ஒருங்கிணைக்கப்பட்ட பிரச்சாரத்தை வடிவமைத்த பெருமைக்குரியவரான சிபி ஜோஷியும் முதல்வர் பதவிக்கான ரேஸில் உள்ளார்.