
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் ஆசிபா என்ற சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியாவில் தொடர்ந்து சிறுமிகள், பெண்கள் மீதான வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. காவல் துறையைச் சேர்ந்தவர் ஒருவரும் ஆசிபா சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது. இதைத் தொடர்ந்து இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளன்ர். ஆசிபா சம்பவம் அடங்குவதற்குள் காஷ்மீரில் 24 வயதுடைய இளம் பெண் சி.ஆர்.பி.எஃப் வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த இளம் பெண் புகார் அளித்ததன்பேரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் கூறுகையில், கடந்த 10 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நான் எனது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது வழி
தெரியாமல் வேறு எங்கேயோ சென்று விட்டேன்.
அப்போது அந்த பகுதியில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள், எனக்கு வழி காட்டுவதாக கூறி அழைத்து சென்றனர். நானும் அவர்களை நம்பி சென்றேன். ஆனால், அவர்கள் என்னை முகாமுக்கு கூட்டிச் சென்றனர். அங்கு ஒரு வீரர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். அருகில் இருந்த இரண்டு வீரர்கள், இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தனர் என்றார்.
அந்த பெண்ணின் புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட மூன்று சி.ஆர்.பி.எஃப். வீரர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து சி.ஆர்.பி.எஃ.ப். அதிகாரி ஒருவர் கூறுகையில், மூன்று வீரர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மூன்று வீரர்கள் மற்றும் புகார் தெரிவித்த பெண்ணும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனையில் குற்றம் உறுதியானால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.