
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில்(என்.சி.ஆர்.) தீபாவளிக்கு பட்டாசுகள் விற்க தடை விதித்து கடந்த நவம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இம்மாதம் 31-ந்தேதி வரை நீடித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
உடல்நலப் பிரச்சினைகள்
டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதிகளில் தீபாவளிப்பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது, குழந்தைகள், பெரியவர்கள், ஆஸ்துமா, நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு சுவாச நோய்கள் ஏற்படுகின்றன,பல்வேறு உடல்உபாதைகள் ஏற்படுகின்றன. ஆதலால் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
விற்பனைக்கு தடை
இந்த மனுவை ஏற்று கடந்த ஆண்டு நவம்பர் 11-ந்தேதி உச்ச நீதிமன்றம் டெல்லியில் பட்டாசுகள் விற்பனைக்கு தடை விதித்தது. மேலும், டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதிக்குள் பட்டாசுகள் விற்பனையாளர்களின் உரிமம், மொத்த விற்பனயைாளர்கள் உரிமம் ஆகியவற்றையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
மீண்டும் மனு
இந்நிலையில், பட்டாசு உரிமையாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தங்களின் இருப்பில் இருக்கும் பட்டாசுகளை மட்டும் விற்பனை செய்ய அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
விற்பனை செய்ய அனுமதி
இதை விசாரணை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர், தீபக் குப்தா கடந்த மாதம் 12-ந்தேதி பிறப்பிப்பித்த உத்தரவில் “ பட்டாசுகள் விற்பனைக்கு நிரந்த உரிமம் பெற்றவர்கள் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, வெடிபொருள் சட்டத்தின் படி பட்டாசுகளை விற்பனை செய்யலாம். தீபாவளிப் பண்டிகை முடிந்தபின் காற்றின் தரம் குறித்து சோதனை நடத்தியபின் தேவைப்பட்டால் உத்தரவு மாற்றி அமைக்கப்படும்’’ எனத் தீர்ப்பளித்தனர்.
அக்.31வரை தடை
இந்நிலையில்,அந்த உத்தரவை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்த மனுவை நீதிபதி ஏ.கி. சிக்ரி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் பிறப்பித்த உத்தரவில், “ உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 12-ந்தேதி பிறப்பித்த உத்தரவான, பட்டாசுகள் விற்பனை செய்ய பாதியளவு தடையை நீக்கிய உத்தரவை நான் மாற்றவில்லை. அதேசமயம், அக்டோபர் 31-ந்தேதி வரை டெல்லி, என்.சி.ஆர்.பகுதியில் பட்டாசுகள் விற்பனை செய்யக்கடாது. நவம்பர் 1-ந்தேதிமுதல் விற்பனை செய்யலாம்’’ என்றார்.
இந்த உத்தரவு மூலம், இம்மாதம் 19-ந்தேதி வரும் தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக டெல்லியில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படாது. வடமாநிலங்களில் 19-ந்தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது.