ரூ.1.47 லட்சம் கோடியை கட்டுங்க.. தீர்ப்பை மாற்ற முடியாது: ஏர்டெல், வோடபோன், டாடா நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

By Asianet TamilFirst Published Jan 17, 2020, 5:36 PM IST
Highlights

மறுசீராய்வு மனுவில் எந்தவொரு தகுதியும் இல்லை என்று நீதிமன்ற அமர்வு அந்த மனுவை தள்ளுபடி செய்தது. 

சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் ஒரு வார காலத்துக்குள் ரூ.1.47 லட்சம் கோடியை செலுத்த வேண்டிய நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளன.
தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு நிறுவனங்கள் தங்களது சரிசெய்யப்பட்ட நிகர வருவாயில் (ஏ.ஜி.ஆர்.) இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை ஆண்டுக்கு உரிம கட்டணமாக அரசுக்கு செலுத்த வேண்டும். இதில், அலைக்கற்றை பயன்பாடு கட்டணம், சொத்து வருமானம் உள்ளிட்டவையும் அடங்கும். 

இந்நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வருவாயை குறைத்து காட்டியதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஏர்டெல், வோடாபோன் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மொத்தம் ரூ.1.47 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் உத்தரவிட்டது. மேலும் ஜனவரி 23ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கியது.

 இதனால் அந்நிறுவனங்கள் கடும் அதிர்ச்சி அடைந்தன. மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தன. அந்த மனுக்கள் உச்ச நீதிமன்றம் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மறுசீராய்வு மனுவில் எந்தவொரு தகுதியும் இல்லை என்று நீதிமன்ற அமர்வு அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், ஒரு வார காலத்துக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.

click me!