
உத்தரப்பிரதேசம், வாரணாசியில் உள்ள பனாராஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
வாரணாசியில் உள்ள பனாராஸ் இந்து பல்கலையில் பயிலும் மாணவி ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் துன்புறுத்தல் செய்து தப்பியது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் கடந்த வார இறுதியில் பல்கலையில் போராட்டம் நடத்தினர். பல்கலையின் துணை வேந்தரை சந்திக்க மாணவர்கள் சென்றபோது, போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது கூட்டத்தினரைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தியதில், ஏராளமான மாணவர்கள், மாணவிகள், 2 பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
டெல்லியில் நேற்று முன்தினம், காங்கிரஸ், இந்திய தேசிய மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடந்த பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் கலந்து கொண்டார். அவரிடம் வாரணாசி பல்கலை தடியடி விவகாரத்தில் தலையிட்டு விரைவாக பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடியும், தேசியத் தலைவர் அமித் ஷாவும் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, உத்தரப்பிரதேச அரசின் செய்தித்தொடர்பாளரும், அமைச்சருமான ஸ்ரீகாந்த் சர்மா நேற்று , முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
பனாராஸ் இந்து பல்கலையில் மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது பதவியில் உள்ள நீதிபதி மூலம் விசாரணை நடத்தப்படுமா? என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக வாரணாசி நகர நிர்வாகம், பல்கலைக்கழக நிர்வாகம், துணை வேந்தர் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சு நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது. அரசியல் செய்ய வேண்டும் என விரும்பினால், எங்களுடன் செய்யலாம் மாணவர்களுடன் செய்யக்கூடாது. பல்கலை வளாகத்தில் போராட்டம் நடத்தாமல் ஒதுங்கி இருக்க வேண்டும் . இவ்வாறு அவர் தெரிவித்தார்.