
கேரளாவைச் சேர்ந்தவரும், ரூ.1200 கோடிக்கு சொத்துக்களுக்கு சொந்தக்காரரான தொழிலதிபர் தனது மகனுக்கு மிக, மிக எளிமையாக பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார்.
கேரளா என்றாலே ஆடம்பரமான திருமணம், மணமகளை நகைகளால் அலங்கரிப்பது என்பது வழக்கமான ஒன்றாகும். இதில் கோடீஸ்வரர்கள் என்றால் கேட்கவே வேண்டாம், அந்த அளவுக்கு டாம்பீகமாக செலவு செய்வார்கள்.
அதேபோலத்தான் ரூ.1200 கோடிக்கு சொத்துக்களை வைத்து இருக்கும் பொரிஞ்ஜூ வெலியத் என்ற தொழிலதிபரும் தனது மகனின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவரோ தனது மகனின் திருமணத்தை பதிவாளர் அலுவலகத்தில் மிக எளிமையாக நடத்தி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். பொரிஞ்ஜூ வெலியத் ‘ஈக்விட்டிஇன்டலிஜென்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மதிப்பு ரூ.1200 கோடியாகும்.
இது குறித்து தொழிலதிபர் பொரிஞ்ஜூ வெலியத் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது-
எனது மகன் அமெரிக்காவில் வசிக்கிறான். அவன் இந்த முறை இந்தியா வந்தபோது, தான் விரைவாகத் திருமணம் செய்து அமெரிக்கா செல்ல வேண்டும் என என்னிடம் தெரிவித்தான். மிகக் குறுகிய காலமே இருந்ததால், அவசரத் திருமணத்தைதான் நடத்த முடியும் என்று அவனிடம் கூறினேன். அதற்கு சரி எனக் கூறி ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, அவர்களுக்கு பதிவாளர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை எளிமையாக திருமணம் நடந்தது. பதிவாளர் அலுவலகத்துக்கு இரு கம்ப்யூட்டர்கள் இலவசமாக கேட்டதால், அதை மட்டும் வாங்கிக்கொடுத்தோம். இந்த திருமணத்துக்காக எந்தவிதமான திட்டமிடலும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவரின் பதிவுக்கு டுவிட்டரில் ஏராளமானோர் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் இதற்கு முன் வி.ஐ.பி. வீடுகளில் நடந்த பல்வேறு திருமணங்கள் பல சர்ச்சையை கிளப்பியுள்ளன. இதில், கடந்த ஜூன் மாதம் சி.பி.ஐ. எம்.எல்.ஏ. கீதா கோபி தனது மகளுக்கு ஏராளமான நகைகளை அணிவித்து திருமணம் நடத்தியது அந்த கட்சிக்குள்ளே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் கேரள சாராய வியாபாரியும், அரசியல்வாதியுமான பிஜூரமேஷ் தனது மகளுக்கு, எம்.எல்.ஏ. அடூர் பிரகாஷின் மகனை மணம் முடித்தார். அந்த திருமணம் நடக்கும் இடம் மைசூர் அரண்மனை போலவும், அக்சர்தாம் கோயில் போலவும் செட்அமைக்கப்பட்டு இருந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது.
2015ம் ஆண்டு நவம்பரில், வெளிநாடு வாழ் இந்தியர் ரவி பிள்ளை என்பவர், கொல்லம்மாவட்டத்தில் தனது மகளுக்கு ரூ.55 கோடியில் திருமணம் செய்தது சர்ச்சையானது. இதுபோன்ற ஆடம்பரமான திருமணங்கள் நடந்துள்ள நிலையில், பொரிஞ்ஜூ வெலியத் மிகவும் எளிமையாக நடத்தியது பாராட்டைப் பெற்றுள்ளது.