
அயோத்தி பிரச்சினைக்கு அமைதி தீர்வுக்கான வரைவு ஒப்பந்தத்தை ‘ஷியா மத்திய வக்பு வாரியம்’ தயாரித்து வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992–-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் 2010–-ம் ஆண்டு தீர்ப்பு வந்தது. அதில், சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சம அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.
3 நீதிபதிகள் அமர்வு
உச்ச நீதிமன்றத்தில் 7 ஆண்டுகளாக இது தொடர்புடைய மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவற்றை விசாரணை மேற்கொள்வதற்காக நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண், எஸ்.ஏ. நசீர் ஆகியோரை கொண்ட 3 பேர் அமர்வை தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் அமைத்து உத்தரவிட்டார்.
ஷியா வக்பு வாரியம்
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் 30 பக்க பிரமாண பத்திரம் ஒன்றை உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷியா மத்திய வக்பு வாரியம் தாக்கல் செய்திருந்தது.
அதில், பாபர் மசூதியை இஸ்லாமியர்கள் வாழும் பகுதிக்கு மாற்றலாம் என கூறப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னி பிரிவு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
டிசம்பர் 6-ந்தேதிக்குள்...
இதற்கிடையில் உத்தர பிரதேச ஷியா மத்திய வக்பு வாரியம் அயோத்தியா விவகாரத்தில் அமைதி தீர்வு எட்டுவதற்காக டிசம்பர் 6-ந்தேதிக்குள் வரைவு ஒப்பந்தம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த வாரியத்தின் தலைவர் வாசிம் ரிஸ்வி இந்து துறவிகள் மற்றும் தலைமை மதகுரு ஆகியோரை சந்திப்பதற்காக அயோத்தியாவிற்கு இந்த மாதம் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த விவகாரத்தில் பரஸ்பரம் தீர்வு ஏற்படுவதற்காக வரைவு ஒப்புதல் ஒப்பந்தத்திற்கான விதிமுறைகள் பற்றி முன்பே ஆலோசனை மேற்கொண்டதாகவும் ரிஸ்வி கூறியுள்ளார்.