
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு 10-க்கு 9 மதிப்பெண் அளிப்பதாக அவரது மனைவி சங்கீதா ஜெட்லி கூறியுள்ளார். இதில் மனித தவறுகள் இருப்பதால் முழு மதிப்பெண் கொடுக்கவில்லை என்றும் சங்கீதா ஜெட்லி கூறியுள்ளார்.
2018-2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில், கிராம மேம்பாடு, விவசாயிகளின் நலன், சுகாதாரம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தியே இந்த பட்ஜெட் இருக்கும் என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்தது. அதற்கான பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்தியில் ஆளும் பாஜக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து சாதக - பாதக பலன் பற்றி அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். பட்ஜெட் குறித்து பொதுமக்கள் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மீடியாக்களும் பட்ஜெட்டின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து வருகிறது.
நேற்று பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, நிதியமைச்சர் அருண்ஜெட்டிலியின் மனைவி சங்கீதா ஜெட்லியிடம் செய்தியாளர்கள் பட்ஜெட் குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த சங்கீதா ஜெட்லி, என்னுடைய கணவர தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு 10-க்கு 9 மதிப்பெண் அளிப்பதாக கூறினார். இதில் மனித தவறுகள் நடந்திருப்பதால், 10-க்கு 10 மதிப்பெண் அளிக்கவில்லை என்றார். பட்ஜெட்டை காங்கிரஸ் குறை கூறியிருப்பதாக செய்தியாளர்கள் கேள்விக்கு, எதிர்கட்சிகளின் வேலையே குற்றங்களைக் கண்டுபிடிப்பதுதான் என்று சங்கீதா ஜெட்லி கூறினார்.
நிதியமைச்சர் அருண்ஜெட்டி பட்ஜெட் தாக்கல் செய்தபோது, நாடாளுமன்றத்தின் பார்வையாளர்கள் மாடத்தில், சங்கீதா ஜெட்லி, மகன் ரோகன் ஜெட்லி, அருண் ஜெட்லியின் சகோதரி மது பார்கவா உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.