
தேசிய அளவில் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அதை களைய வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். அதில் முக்கிய பங்கு அரசுக்கு உள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவில் இந்த அவலம் நடந்துகொண்டே தான் இருக்கிறது. வரமாக இருக்க வேண்டிய பள்ளி படிப்பு, சாபமாக மாறிவிட்டதன் வெளிப்பாடாகத்தான் இதுபோன்ற தற்கொலைகளை கல்வி ஆர்வலர்கள் பார்க்கின்றனர். பள்ளி கல்வி தொடர்பாக சுய பரிசோதனை செய்து மாணவர்கள் தற்கொலையை தடுக்க வேண்டும் என்று கல்வி ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படியான சூழலில், மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ரச்சகொண்டா பகுதியில் பள்ளி கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஹைதராபாத் ரச்சகொண்டா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவந்த அந்த மாணவி, கட்டணம் செலுத்தாததால், தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. மேலும் மற்ற மாணவர்கள் முன்னிலையில், அந்த மாணவி அவமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி, வீட்டிற்கு சென்றதும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணத்தை, மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மாணவியின் ஆடையிலிருந்து அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் பள்ளிகளின் இதுபோன்ற அட்டூழியங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.