ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம் என்று விமானப்படை அறிக்கை அளித்துள்ளது.
பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து
இந்திய பாதுகாப்பு படையின் தலைமை தளபதியாக இருந்தவர் ஜெனரல் பிபின் ராவத், தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டனில் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி கோவை விமானம் நிலையம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வெலிங்கடன் பயிற்சி முகாமிற்கு சென்ற போது மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
undefined
மலையில் மோதிய ஹெலிகாப்டர்
இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட ராணுவ அதிகாரிகள் 14 பேர் உயிரிழந்தனர். குன்னூர் அடுத்த நஞ்சப்பசத்திரம் கிராமத்தின் அருகே உள்ள மலைப்பகுதியில் மோதிய எம்.ஐ. ரக ஹெலிகாப்டர் கீழே விழுந்த சிதறியது. இதில் பிபின் ராவத் மற்றும் ஒரு சில அதிகாரிகள் பலத்த காயத்தோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது விபத்திற்கு காரணம் என்ன.? வானிலை தகவல்கள் என்ன.? வானிலை மோசமாக இருந்த போது ஹெலிகாப்டரை இயக்கியது ஏன் என பல விசாரணைகள் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு மனித தவறே காரணம் என்று விமானப்படை அறிக்கை அளித்துள்ளது. இதில் ராணுவ நிலைக்குழு அறிக்கையானது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2017 – 2022 வரையிலான 5 ஆண்டு காலத்தில் 34 விமானப்படை விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள குன்னுாரில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது.
விபத்திற்கு காரணம் என்ன.?
இந்த அறிக்கையில் ஹெலிகாப்டர் மலையின் மோதி ஏற்பட்ட விபத்திற்கு விமானியின் தவறே காரணம் எனவும், வானிலை மாற்றம் காரணமாக தடுமாறிய விமானி, ஹெலிகாப்டரை மேக கூட்டத்தின் நடுவே செலுத்தியதாகவும். .இதன்பின் ஹெலிகாப்டர் மலையில் மோதி நிலைதடுமாறி நிலத்தில் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக ஹெலிகாப்டரில் உள்ள ரிகார்டரில் பதிவான விபரங்களின்படி இது தெரிய வந்து இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.