
இன்று (ஜூன் 12) நடந்த ஏர் இந்தியா விமான விபத்து உலகையே உலுக்கி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானத்தின் நிலையத்திலிருந்து லண்டன் கார்விக் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 230 பயணிகள், 10 விமான ஊழியர்கள், இரண்டு விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர்.
விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. கருப்புப் பெட்டியை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என குஜராத் காவல்துறை சார்பில் கூறப்பட்டது. ஆனால் தற்போது ஒரே ஒருவர் உயிர்பிழைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விமானத்தில் 11ஏ இருக்கையில் பயணித்த ஒருவர் அவசரகால வெளியேறும் வழி வழியாக குதித்து உயிர் தப்பியுள்ளார்.
ரமேஷ் விஸ்வாஸ் குமார் என்ற அந்த இளைஞர் அவசரகால வெளியேறும் வழியாக வெளியில் குதித்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு மார்பு, கண், கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சிகிச்சைப் பெற்று வருகிறார். விமானத்திலிருந்து கீழே குதித்த அவர் ரத்த காயங்களுடன் ஆம்புலன்ஸில் ஏறும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
40 வயதான ரமேஷ் விஸ்வாஸ் குமார் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் நபர் ஆவார். வெள்ளை டி-ஷர்ட் அணிந்து டி-ஷர்ட் முழுவதும் ரத்தக்கறையுடன் காலில் காயங்களுடன் தட்டு தடுமாறி நடந்து செல்லும் அவரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த தன் சகோதரரை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் வேண்டும் விஸ்வாஸ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். லண்டனில் 20 வருடமாக வசித்து வரும் அவர், இந்தியாவில் தனது குடும்பத்தினரை சந்தித்து விட்டு லண்டன் செல்லும்போது இந்த விபத்து நடந்துள்ளதாக கூறியுள்ளார்.