
தனக்கு குடியரசுத் தலைவர் பதவி அளிக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல்
தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, அடுத்த புதிய குடியசுத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் பதவிக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி முன்னிறுத்தப்படுவார் என்றும் அவருக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்ற பேச்சுகள் வட இந்தியாவில் உலவ தொடங்கியுள்ளன. கடந்த காலங்களில் பாஜகவுடன் 4 முறை கூட்டணி அமைத்து உ.பி.யில் மாயாவதி முதல்வராக இருந்திருக்கிறார். 2007-ஆம் ஆண்டில் உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து தனி மெஜாரிட்டி பெற்று மாயாவதி ஆட்சியைப் பிடித்தார்.
பாஜகவுக்கு உதவி?
ஆனால், அண்மையில் உ.பி.யில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 12.7 சதவீத வாக்குகளை மட்டுமே மாயாவதி பெற்றார். சட்டப்பேரவைக்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ. மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்வானார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலித் வாக்குகளைப் பிரித்ததால் பாஜகவால் சுலபமாக வெற்றி பெற முடிந்தது என்றும் பாஜகவின் வெற்றிக்கு மாயாவதி தொடர்ந்து உதவி வருகிறார் என்றும் அவர் மீது பிற எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தச் சூழலில் பாஜகவுக்கு செய்த கைமாறுக்காக அவருக்கு குடியரசுத் தலைவர் பதவி வழங்கப்படும் என்றும் உ.பி.யில் பேச்சுகள் கிளம்பியுள்ளன.
மாயாவதி விளக்கம்
இந்நிலையில் இதுதொடர்பாக மாயாவதி விளக்கம் அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “குடியரசுத் தலைவர் பதவியை நான் பெற்றுக் கொண்டால் அத்தோடு என்னுடைய கட்சியின் கதை முடிந்து விடும். அப்படி இருக்க, நான் எப்படி குடியரசுத் தலைவர் பதவியை ஏற்பேன்? உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே லட்சியம். பாஜகவோ அல்லது வேறு எந்தக் கட்சியும் எனக்கு குடியரசுத் தலைவர் பதவியை அளித்தாலும் நான் ஏற்று மாட்டேன். உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் எனக்கும் எதிராக பல சதிகள் நடந்தன. உ.பி.யில் மாயாவதி ஆட்சி அமைக்காவிட்டால் அவருக்கு குடியரசு தலைவர் பதவி வழங்கப்படும் என்று ஆர்எஸ்எஸ், பாஜகதான் மக்களிடையே பொய்யை பரப்பின. நான் குடியரசுத் தலைவர் ஆக வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்” என்று மாயாவதி தெரிவித்தார்.