
முதல்வர் யோகி ஆதித்யநாத் :
இந்நிலையில், தற்போது உபி சட்டம் ஒழுங்கை நேரடியாக கண்காணிக்கும் வகையில் உள்துறையை முதல்வர் யோகி ஆதித்யநாத் தக்கவைத்துக் கொண்ட நிலையில், ஊரக வளர்ச்சித் துறையும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கும், சக துணை முதல்வர் பிரஜேஷ் பதக்கிற்கு சுகாதாரத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
உத்தர பிரதேச மாநில அரசியல் வரலாற்றில், 37 ஆண்டுகளுக்கு பிறகு, முதலமைச்சர் ஒருவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி ஏற்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் யோகி ஆதித்யநாத் பல்வேறு வகையான அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகிறார்.
10 ஆயிரம் பேருக்கு அரசு வேலை :
இந்நிலையில் அடுத்த 100 நாட்களில் 10,000க்கும் மேற்பட்ட மாநில இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க தேர்வு வாரியத்துக்கு உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ இளைஞர்களை இணைத்து, அவர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. அடுத்த 100 நாட்களில், மாநிலத்தைச் சேர்ந்த, 10,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, அரசு வேலை வழங்க, அனைத்து சேவைகள் தேர்வு வாரியத்துக்கு, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அரசு அதிகாரிகளுடனான கூட்டத்தில் ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவுபடுத்தவும், நிலுவைகளை நீக்கவும், புதிய ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவில் தொடங்கவும் அவர் கேட்டுக் கொண்டார். அந்த வகையில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் முதல் சிக்ஸரை பறக்கவிட்டு இருக்கிறார் யோகி ஆதித்யநாத்.