பிங்கு என்று சொல்லிக்கொண்டு வந்த நபர் உண்மையில் கோண்டா கிராமத்தைச் சேர்ந்த நஃபீஸ் என்றும், அவர் பிங்குவின் குடும்பத்தை ஏமாற்ற முயன்றார் என்றும் போலீசார் கண்டறிந்தனர். ரதிபால் சிங் புகார் அளித்ததன் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை கூறியுள்ளது.
வீட்டை விட்டு வெளியேறி 22 ஆண்டுகளுக்குப் பிறகு துறவியாக வந்து தாயிடம் பிச்சை கேட்ட நபரைப் பற்றிய செய்தி சில நாட்களுக்கு முன் வைரலானது. ஆனால் அடுத்த சில நாட்களுக்குள் அந்த நபர் ஏமாற்றிவிட்டு பணம் பறிக்க முயன்றது தெரியவந்துள்ளது.
டெல்லியில் வசிக்கும் பானுமதி சிங், 11வது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய தனது மகன் பிங்குவுடன் கடந்த மாதம் மீண்டும் சந்தித்தார். அதிகமாக விளையாடிக் கொண்டே இருந்ததற்காக பெற்றோர் திட்டியதற்காக பிங்கு 2002 இல் வீட்டை விட்டு ஓடினார். 22 வருடங்களுக்குப் பிறகு அவர் சொந்த கிராமமான அமேதியில் உள்ள கரௌலிக்கு ஒரு துறவி வந்திருப்பதாக அந்த ஊர்மக்கள் மூலம் தகவல் கிடைத்தது.
உடனே பானுமதி கணவர் ரதிபால் சிங்குடன் காரௌலிக்கு விரைந்து சென்றுள்ளார். ஜனவரி 27 அன்று அவர்கள் தங்கள் மகனைச் சந்தித்துள்ளனர். அப்போது, சன்னியாசி தோற்றத்தில் இருந்த பிங்கு பானுமதியிடம் பிச்சை கேட்கும் வீடியோ வெளியாகி வைரலானது.
பிச்சை பெற்ற பின் பிங்கு மீண்டும் திரும்பிச் செல்வதாகக் கூறியுள்ளார். பெற்றோரும் ஊர்மக்களும் முதலில் பிங்குவை விட மறுத்தனர். ஆனால், அவர் தனது முடிவில் உறுதியாக இருப்பதை உணர்ந்து, இறுதியில் ஒப்புக்கொண்டனர். கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு 13 குவிண்டால் உணவு தானியத்தை பிச்சையாக வழங்கினர். மேலும் ரதிபாலின் சகோதரியும் அவருக்கு ரூ.11,000 கொடுத்தார். ரதிபால் சிங் மகன் பிங்குவுக்கு ஒரு போனை வாங்கிக் கொடுத்து தொடர்பில் இருக்குமாறு கூறியுள்ளார்.
பிப்ரவரி 1ஆம் தேதி கிராமத்தை விட்டு மீண்டும் வெளியேறினார் பிங்கு. பிங்கு வெளியேறிய பிறகு, தந்தை ரதிபாலை போனில் அழைத்து மீண்டும் வீடு திரும்ப விரும்புவதாகக் கூறினார். ஆனால் மடத்திற்கு ரூ.10 லட்சம் கொடுக்கும் வரை தன்னால் வெளியேற வர முடியாது என்றும் கூறியுள்ளார். இது ஒரு துறவி குடும்ப வாழ்க்கைக்குத் திரும்புவதற்குக் கொடுக்க வேண்டிய விலை என்று கூறி நம்ப வைத்துள்ளார்.
தனது மகன் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்ற ஆசையில் ரதிபால் கிராமத்தில் உள்ள தனது நிலத்தை விற்று ரூ.11.2 லட்சத்தை மடத்திற்குக் கொடுக்க ஜார்கண்ட் வருவதாக பிங்குவிடம் கூறியுள்ளார்.
ஆனால், ரதிபால் மடத்துக்கு வரக்கூடாது என்று பிங்கு மறுத்துள்ளார். அதற்குப் பல காரணங்களையும் கூறியிருக்கிறார். ரதிபால் தனக்கு வங்கிப் பரிமாற்றம் மூலமாகவோ அல்லது UPI செயலி மூலமாகவோ பணத்தை அனுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தத் தொடங்கினார்.
இது ரதிபாலுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால், ஜார்க்கண்டில் பிங்கு இருப்பதாகக் கூறிய பரஸ்நாத் மடம் பற்றி விசாரிக்கத் தொடங்கினார். அப்போது அந்தப் பெயரில் மடம் எதுவும் இல்லை என்பதைக் கண்டறிந்தார். உடனே, சனிக்கிழமை, ரதிபால் அமேதி மாவட்டத்தில் ஜெய்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பிங்கு என்று சொல்லிக்கொண்டு வந்த நபர் உண்மையில் கோண்டா கிராமத்தைச் சேர்ந்த நஃபீஸ் என்றும், அவர் பிங்குவின் குடும்பத்தை ஏமாற்ற முயன்றார் என்றும் போலீசார் கண்டறிந்தனர். ரதிபால் சிங் புகார் அளித்ததன் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை கூறியுள்ளது.
நபீஸின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வருவதும் அம்பலமாகியுள்ளது. நபீஸின் சகோதரர் ரஷீத், தன்னைத் துறவியாகக் காட்டிக்கொண்டு 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதேபோல பல குடும்பங்களை ஏமாற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சஹஸ்புரா கிராமம் 14-ல் இருந்து புத்திரம் விஸ்வகர்மா என்ற நபரின் மகன் ரவி காணாமல் போனார். பல ஆண்டுகளுக்கு முன்பு, ரஷீத் ஒரு சந்நியாசி போல் நடித்து அந்த கிராமத்தை அடைந்தார். அவர் தான் ரவி என்று கூறி, புத்திரத்தின் மனைவியிடம் பிச்சை கேட்டார்.
ரஷீத்தை ரவி என்று நினைத்த குடும்பம் அவரைத் தங்களுடன் தங்க வைத்துக்கொண்டது. ரஷீத் லட்சக்கணக்கில் மதிப்புள்ள பணத்துடன் தலைமறைவானார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டபோது அவரது உண்மையான அடையாளம் வெளிச்சத்திற்கு வந்தது.
ரஷீத் சஹாஸ்புரா கிராமத்தை அடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு, வாரணாசியின் ஹாஜிபூர் கிராமத்தில் உள்ள கல்லு ராஜ்பரின் வீட்டில் நஃபீஸின் உறவினர் ஒருவர் வந்தார். துறவியின் உடையில் இருந்த அவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கல்லுவின் மகனாக நடித்தார்.