
எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிமினல்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்க கோரி அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்தார். அதில், 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் அடிப்படையில், 1,581 பேர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.
இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது. இவர்களில் 10 பேர் மரணமடைந்ததால் அவர்களைத் தவிர 1571 பேர் மீதான வழக்குகளை விரைவில் நடத்தி முடிக்கக்கோரி மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசின் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘‘நாடுமுழுவதும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது. முதல்கட்டமாக நாடு முழுவதும் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். தேவை ஏற்பட்டால் சூழ்நிலைக்கு ஏற்ப கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தமிழகம் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஆனந்த் சர்மா சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளை மட்டுமே தனிமைப்படுத்தி சிறப்பு நீதிமன்றம் அமைப்பது சட்ட விரோதம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியல் சட்டப்பிரிவு 14க்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.