PFI வங்கி கணக்கு முடக்கம்..! மக்கள் பணியை பாஜகவால் முடக்க முடியாது இந்திய தேசிய லீக் திட்டவட்டம்

By Ajmal KhanFirst Published Jun 2, 2022, 11:01 AM IST
Highlights

மக்கள் சேவை செய்து வரும்  பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாக வங்கி கணக்குகளை முடக்கியிருப்பது மூலம்,  மக்கள் சேவையை மத்திய பாஜக அரசு  ஒரு போதும் முடக்கி விட முடியாது என இந்திய தேசிய லீக் தெரிவித்துள்ளது.
 

வங்கி கணக்கு முடக்கம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு 2006 ஆம் ஆண்டு கேரளாவில் தொடங்கப்பட்டது. இந்தநிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. கருப்பு பணத்தை வெள்ளையாக்குதல் பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ. 68.62 லட்சம் மதிப்பிலான வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.59 லட்சத்து 12 ஆயிரத்து 51 ரூபாய் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 23 கணக்குகளும், 9 லட்சத்து 50 ஆயிரத்து 30 ரூபாய் கொண்ட ரிஹாப் இந்தியா அறக்கட்டளையின்ன் 10 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்களிடம் வரவேற்பு

இந்தநிலையில் இது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய தேசிய லீக்  மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப்  2006ம் ஆண்டு கேரளாவை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட அமைப்பு. பல ஆண்டுகளாக, மாநில முஸ்லீம் சமூகத்தின் சமூக-பொருளாதார நலனுக்காக செயல்படும் ஒரு அமைப்பாக அவர்களின் பணி மாநிலம் முழுவதும் கவனிக்கப்பட்டது. இதனால் அமைப்பின் புகழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  தமிழகத்தில் மனித நீதிப் பாசறை, கர்நாடகத்தில் கர்நாடக கண்ணிய மன்றம், கோவாவில் குடிமக்கள் மன்றம், ராஜாஸ்தானில் கல்வி மற்றும் சமுதாயச் சமூகம், மேற்கு வங்கத்தில் நகரிக் அதிகர் சுரக்‌ஷா சமீதி, மணிப்பூரில் லிலிங் சமூகக் மன்றம், ஆந்திரப் பிரதேசத்தில் சமூக நீதிக் கழகம் போன்ற அமைப்புகள் இதனுடன் இணைந்தன. இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு, இஸ்லாமியத் தனிநபர் சட்ட நீதிமன்றம், பட்டியலினம் மற்றும் முஸ்லிம் மக்களின் கல்வி மேம்பாடு போன்றவற்றில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் அரசியல் பிரிவாக இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 2009 ஆண்டு தொடங்கப்பட்டது.

மக்கள் சேவையை முடக்க முடியாது

தற்போது நாடு முழுவதும் 22 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பாஜக தலைவர்கள் இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மக்கள் சேவையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் மதவாத சக்திகளின் செயலை இந்திய தேசிய லீக் வன்மையாக கண்டிக்கிறது.  தமிழகத்தில் 2015ம் ஆண்டு பெருவெள்ளம், கஜா புயல், கொரோனா பெருந்தொற்று என பல பேரிடர் காலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சேவை என்பதை யாராலும் மறுக்க முடியாது. இப்படி மக்கள் சேவை செய்து வரும்  பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த அமைப்பின் வங்கி கணக்குகளை முடக்கியிருப்பது மூலம், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மக்கள் சேவையை மத்திய பாஜக அரசு  ஒரு போதும் முடக்கி விட முடியாது என இந்திய தேசிய லீக் சார்பில் தெரிவித்துக் கொள்வதாக முனிருத்தீன் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
 

click me!