
ஒசாமா பின் லேடன் புகைப்படத்தை அலுவலகத்தில் வைத்த மின்துறையை சேர்ந்த துணைப் பிரிவு அதிகாரி உத்திர பிரதேச மாநிலத்தில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த ஒசாமா பின் லேடன் புகைப்படத்தில், உலகின் சிறந்த இன்ஜினியர் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
முன்னதாக அல்கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன், உலகின் சிறந்த ஜூனியர் இன்ஜினியர் என கூறி அவரின் புகைப்படத்தை தனது அலுவலகத்தில் வைத்து இருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இது பற்றி மாவட்டத்தின் மூத்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, துணைப் பிரிவு அதிகாரியை பணி இடைநீக்கம் செய்தனர். மேலும் பின்லேடன் புகைப்படமும் அலுவலகத்தில் இருந்து நீக்கப்பட்டது.
தக்ஷின்ஷால் வித்யுத் வித்ரன் நிகம் லிமிடெட் (DVVNL) நிறுவனத்தில் துணைப் பிரிவு அதிகாரியாக ரவீந்திர பிரகாஷ் கௌதம் பணியாற்றி வந்தார். இவர் தனது அலுவலகத்தில் ஒசாமா பின்லேடன் புகைப்படத்தை வைத்து இருந்தார். புகைப்படத்தின் கீழ், “மதிப்பிற்குரிய ஒசாமா பின்லேடன், உலகின் சிறந்த ஜூனியர் இன்ஜினியர்,” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
விசாரணை:
“இந்த சம்பவம் பற்றி ரவீந்திர பிரகாஷ் கௌதம் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது, இதைத் தொடர்ந்து தக்ஷின்ஷால் வித்யுத் வித்ரன் நிகம் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவீந்திர பிரகாஷ் கௌதமை பணி இடை நீக்கம் செய்து இருக்கிறார்,” என்று ஃபரூக்காபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் சஞ்சய் குமார் சிங் தெரிவித்து இருக்கிறார்.
பணி இடை நீக்கம் செய்யப்பட்ட ரவீந்திர பிரகாஷ் கௌதம் தனது செயலில் எந்த தவறும் இல்லை என்றே குறிப்பிட்டு இருக்கிறார். “யார் வேண்டுமானாலும் அன்புக்குரியவராக இருக்கலாம். ஓசாமா பின்லேடன் உலகின் சிறந்த ஜூனியர் இன்ஜினியராக இருந்தார். அவரின் புகைப்படம் நீக்கப்பட்டு இருக்கிறது, ஆனால் என்னிடம் அதே புகைப்படத்தின் நகல்கள் உள்ளன,” என்று ரவீந்திர பிரகாஷ் கௌதம் தெரிவித்தார்.