
காருக்குள் வைத்து மேற்கு மண்டல காவல்துறை ஐஜி ஹேமந்த் நிம்பால்கரை தீ வைத்து எரிக்க முயன்ற இந்து அமைப்பினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம், உத்தர் கன்னடா மாவட்டத்தின் கும்டா பகுதியை சேர்ந்த 19 வயது இந்து வாலிபர் கொலை செய்யப்பட்டதையடுத்து இந்து அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளன. பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பினர்தான் இந்த கொலைக்கு காரணம் என அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை இதுவரை எந்த அமைப்பின் மீதும் சந்தேகம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக ஏற்படும் கலவரத்தை தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் இந்து அமைப்பினர் கலவரத்தை கையில் எடுத்தனர். நிலைமை கைமீறியதால், வன்முறை நடைபெறும் இடங்களை மேற்பார்வையிட மேற்கு மண்டல காவல்துறை ஐஜி ஹேமந்த் நிம்பால்கர் சென்றிருந்தார்.
அப்போது கலவரக்காரர்கள், போலீஸ் அதிகாரி சென்ற இன்னோவா காருக்கு தீ வைத்தனர். இதையடுத்து, தக்க நேரத்தில், ஹேமந்த் நிம்பால்கர் மற்றும் காரில் இருந்த பாதுகாப்பு போலீசார் கீழே இறங்கி காயமின்றி தப்பிவிட்டனர்.