
ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில் ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த மூதாட்டியும் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோகித், சமீபத்தில் கோயம்புத்தூரில் நேரடியாக பல பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் கோவை மாவட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டமும் நடத்தினார். இதனால் தமிழக எதிர்கட்சிகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைதொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, திமுகவினர், ஆய்வுக்கு வரும் கவர்னருக்கு கடலூர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்பாட்டம் செய்து எங்கள் எதிர்ப்பைக் காட்டுவோம் என அறிவித்தனர்.
அதனபடி இன்று கடலூரில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் புரோஹித்துக்கு எதிராக திமுகவினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து ஆளுநர் ஆய்வு செய்யும் இடங்களை திட்டமிட்டுவைத்திருந்த பிளான் மாறி போனது. இதையடுத்து ஆய்வை முடித்து கொண்டு ஆளுநர் பன்வாரிலால் காரில் சென்னை திரும்பினார். அவர் காருக்கு முன்னும் பின்னும் ஏராளமான பாதுக்காப்பு படையினர் காரில் பயணம் செய்தனர்.
அப்போது, மாமல்லபுரம் அருகே வந்துகொண்டிருந்தபோது பாதுகாப்பு படையினரின் கார் மோதியதில் சாலையை கடக்க முயன்றவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
படுகாயமடைந்த மூதாட்டி ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.