
நிதி நெருக்கடி :
அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. முக்கியமாக சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு சமீபத்தில் வெகுவாக குறைக்கப்பட்டது. எரிபொருள் பற்றாக்குறையுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் அந்நாட்டில் வழக்கமாகிவிட்டது.
இதனால்,அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவிக்கிறது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது.இதன் காரணமாக இலங்கையை நிதி நெருக்கடியில் இருந்து மீட்பதற்கும், மருந்து, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு இந்தியா கடன் வழங்கியது.
தேர்வு ஒத்திவைப்பு :
உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் கடன் வசதிக்காக SBI மற்றும் இலங்கை அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இந்தியா 1 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது (ரூ.7,500 கோடி) கடன் கொடுக்கிறது.
இந்த நிலையில், தாள்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. போதிய நிதி இல்லாததால் தாள்களை அச்சிடவும், இறக்குமதி செய்யவும் இலங்கை அரசு திணறி வருகிறது. தாள்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அடுத்த வாரம் நடைபெறவிருந்த தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.