கொரோனா தாக்கி மீண்டு வீடு திரும்பிய குடும்பம்... வரவேற்று கொண்டாடித் தீர்த்த அக்கம்பக்கத்து மக்கள்..!

By Thiraviaraj RMFirst Published Mar 26, 2020, 3:32 PM IST
Highlights

 அருகில் வசிப்பவர்கள் ஒதுக்குவார்கள் என்ற எண்ண ஓட்டத்தில் இருந்துள்ளனர். ஆனால், அந்த எண்ணத்தை தூள் தூளாக்கும் விதமாக, அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும், மக்கள் வரிசையில் நின்று கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பம், நோய் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பிய போது, அவர்களது அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் வசித்து வரும் மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் குடும்பம், தற்போது முழுமையாக குணமாகி வீடு திரும்பியுள்ளது.

புனே நகரைச் சேர்ந்த ஜிவந்தர், பிரஷாந்தி தம்பதிக்கும் அவர்களின் மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது, கடந்த 10ம் தேதி உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து,  மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட இவர்களுக்கு, தற்போது இரண்டு முறை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவு நெகட்டிவ் என வந்துள்ளது. இதனால், இந்த குடும்பத்தினர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருவதால், அவர்களை அருகில் வசிப்பவர்கள் ஒதுக்குவார்கள் என்ற எண்ண ஓட்டத்தில் இருந்துள்ளனர். ஆனால், அந்த எண்ணத்தை தூள் தூளாக்கும் விதமாக, அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும், மக்கள் வரிசையில் நின்று கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

 அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்ததும், பலரும் தங்கள் பால்கனியில் நின்றவாறே கைகளைத் தட்டி, கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களை வரவேற்றனர். இன்னும் சில நெருக்கமானவர்கள், தங்கள் வீட்டுக்குத் தேவையான பொருள்களைக் கொண்டுவந்து தந்துள்ளனர். இது போன்ற சம்பவங்களை சிறிதும் நினைத்துப் பார்க்காத இந்த குடும்பம், சுற்றத்தார் அன்பில் நெகிழ்ந்துள்ளனர்.

அதேபோல, மும்பை நகரின் முதல் கொரோனா பாசிட்டிவ் மூத்த தம்பதியும் தற்போது கொரோனா நெகட்டிவ் என டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 15 நாள்கள் கஸ்தூரிபா மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள், தற்போது வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். அவர்களுக்கும் அதேபோன்ற வரவேற்பு தங்கள் குடியிருப்பில் கிட்டியதால் நெகிழ்ந்துபோனார்கள். வயதான, நடக்கவே சிரமப்படும் தனது மனைவியை இரண்டாவது மாடியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச்செல்ல சில அண்டை வீட்டுக்காரர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகளுடன் வந்து உதவியதாக நெகிழ்ந்தார்.

 சிலர், மளிகைப் பொருள்கள் அளித்ததாகவும், சிலர் இரவு உணவைத் தயார்செய்து கொண்டுவந்து கொடுத்தாகவும் சொல்கின்றனர்.  இது குறித்து பேசிய மருத்துவர்கள், ``கொரோனா ஒன்றும் குணப்படுத்த முடியாத வியாதி கிடையாது. காற்றில் பரவும் வியாதியும் கிடையாது. இந்த உண்மையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்கின்றனர். 
 

click me!