தேர்தல் பத்திரத் திட்டம் - தவறான தீர்ப்பு!

By Swaminathan Gurumurthy  |  First Published Feb 27, 2024, 5:32 PM IST

தேர்தலில் அரசியல் கட்சிகள் கருப்புப் பணம் வாங்குவதைத் தவிர்க்க, அரசியல் கட்சிகள் வங்கி மூலம் நிதி பெறுவதற்கு வகை செய்ய, மோடி அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரத் திட்டம் செல்லாது என்று கூறி, அதை ரத்து செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை அனைத்து ஊடகத்துறையினரும், அறிவுஜீவிகளும் வரவேற்றிருக்கின்றனர். தங்கள் தேர்தல் நிதி முழுவதையும் பத்திரங்கள் மூலம் பெற்ற எதிர்க்கட்சிகள் கூட தீர்ப்பை வரவேற்றிருக்கின்றன. ஆனால், நமது கருத்தின்படி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் தவறானது. ஏன் என்பதைப் பார்க்கலாம்.
 


தேர்தலில் அரசியல் கட்சிகள் கருப்புப் பணம் வாங்குவதைத் தவிர்க்க, அரசியல் கட்சிகள் வங்கி மூலம் நிதி பெறுவதற்கு வகை செய்ய, மோடி அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரத் திட்டம் செல்லாது என்று கூறி, அதை ரத்து செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை அனைத்து ஊடகத்துறையினரும், அறிவுஜீவிகளும் வரவேற்றிருக்கின்றனர். தங்கள் தேர்தல் நிதி முழுவதையும் பத்திரங்கள் மூலம் பெற்ற எதிர்க்கட்சிகள் கூட தீர்ப்பை வரவேற்றிருக்கின்றன. ஆனால், நமது கருத்தின்படி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் தவறானது. ஏன் என்பதைப் பார்க்கலாம்.

கருப்புப் பணத்துக்கு மாற்று

தேர்தல் பத்திரத் திட்டம் வரும்வரை, ஆளும் கட்சியானாலும், எதிர்க்கட்சியானாலும் ரொக்கத்தில் தான் நன்கொடை பெற்று வந்தன. ரொக்கம் என்றாலே கருப்புப் பணம்தான். கருப்புப் பணத்துக்கு, தேர்தல் பத்திரத் திட்டம் மாற்று என்பதை யாரும் மறுக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்த விபரப்படி, 2019-லிருந்து இதுவரை அரசியல் கட்சிகள் ரூ.16,518 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் வழியாக நன்கொடையாகப் பெற்றிருக்கின்றன. இது வங்கிகள் மூலம் கொடையாளர்களால் அரசியல் கட்சிகளுக்குத் தரப்பட்டது. எனவே, அது கருப்புப் பணம் அல்ல என்பதை, தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூட மறுக்க முடியாது.

தேர்தல் பத்திரங்கள் இல்லை என்றால் கட்சிகளுக்கு 16,518 கோடி ரூபாய் ரொக்கத்தில், அதாவது கருப்புப் பணத்தில்தான் கிடைத்திருக்கும். ஏனென்றால் யார் நன்கொடை கொடுக்கிறார்களோ அவர்கள், செக் மூலம் கொடுக்க விரும்பினாலும், கொடுக்கத் தயங்குகிறார்கள். ஏன்? கட்சிகள் கணக்கு கொடுக்கும்போது, செக் ஆகக் கொடுத்தால், கொடையாளரின் பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவாகும். எந்தக் கட்சிக்கு யார் எவ்வளவு கொடுத்தார்என்பது தெரிந்துவிடும். தெரிந்தால், அடுத்த கட்சி, எங்களுக்கும் அவ்வளவு பணம் கொடுக்கவில்லை என்றால்... என்று மிரட்டும். எந்தக் கொடையாளர் தான் இந்தச் சிக்கலில் மாட்ட விரும்புவார்? எனவே, கொடுப்பவர்களின் பெயர், அடையாளம் வெளியே தெரியாமல் இருக்க வகைசெய்கிறது பத்திரத் திட்டம்.

கருப்புப் பணத்தில் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பவர்கள் தேர்தல் பத்திரம் பக்கம் வரவே போவதில்லை. கருப்புப் பணத்தில் கொடுக்க விரும்பாதவர்கள்தான் பத்திரம் மூலம் கொடுப்பார்கள். தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், செக் மூலம் கொடுக்க விரும்புபவர்கள் கூட, செக் ஆகக் கொடுக்கத் தயங்குவார்கள். தாங்கள் கொடுக்க விரும்பும் கட்சிகளுக்கு சட்ட விரோத ஹவாலா முறையில், கருப்புப் பணத்தைக் கொடுக்கும் நிர்பந்தத்தை நீதிமன்றத் தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு கருப்புப் பணம் வருவதைக் குறைக்கும் நல்ல திட்டத்தை உச்ச நீதி மன்றம் ரத்து செய்திருப்பது துரதிருஷ்டம்.

தேர்தல் பத்திர நன்கொடை: பா.ஜ.க.வுக்கு அதிகம், எதிர்க்கட்சிகளுக்குக் குறைவா?

அரசியல் கட்சிகளின் தணிக்கை செய்யப்பட்ட 2022-23 ஆண்டுக்கான கணக்குப்படி, தேர்தல் பத்திரம் மூலம் எவ்வளவு நன்கொடை கிடைத்தது என்பதை கீழே அட்டவணையில் (படம்) காணலாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால், மொத்த நன்கொடையில் 97.5% -ஐ தேர்தல் பத்திரம் மூலம் திரிணாமூல் காங்கிரஸ் பெற்றிருக்கிறது. தேர்தல் பத்திரத்தின் மூலம் தி.மு.க. பெற்றது 86.31%. ஒடிசா பிஜு ஜனதா தளம் [BJD] 84%. தெலுங்கானா பாரத ராஷ்ட்ர சமிதி [BRS] 72%. ஆந்திரா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 69.6%. பா.ஜ.க. 55%. காங்கிரஸ் 38%. இப்படி தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பணம் பெற்றன. தேர்தல் பத்திரத் திட்டம் கொண்டுவந்த பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் கூட கருப்புப் பணத்தைத் தவிர்த்து, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறத் தொடங்கியிருப்பது நல்ல மாற்றம்.

2021-22-ல் 96.8% தேர்தல் பத்திரங்கள் மூலம் திரிணாமூல் காங்கிரஸ் பெற்றது, அடுத்த ஆண்டு 97.5% ஆகக் கூடியதே தவிர குறையவில்லை. 2022-23-ல் பா.ஜ.க. தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 1,294 கோடி பெற்றது. இரண்டாவதாக ஆகீகு ரூ.529 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றது. ரூ. 325 கோடி பெற்ற திரிணாமூல் 3-ஆவது இடத்திலும்,

ரூ. 185 கோடி பெற்ற தி.மு.க. 4-ஆவது இடத்திலும், ரூ.171 கோடி பெற்ற காங்கிரஸ் 5-ஆவது இடத்திலும், ரூ. 152 கோடி பெற்ற BJD 6-ஆவது இடத்திலும் இருப்பதை அட்டவணையில் காணலாம்.


தேர்தல் பத்திர திட்டம் அமலானது முதல் இதுவரை ரூ.16,518 கோடி, பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டிருக்கிறது என்று நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. அதில் பா.ஜ.க.வுக்கு ரூ.6,566 கோடி, காங்கிரஸுக்கு ரூ.1,123 கோடி, திரிணாமூல் காங்கிரஸுக்கு [TMC] ரூ.1092 கோடி, BJD-க்கு ரூ.775 கோடி, தி.மு.க.வுக்கு ரூ.617 கோடி, BRS-க்கு ரூ.384 கோடி (படம்-2). மற்றவை மேலும் சில கட்சிகளுக்கு.



மொத்த பத்திர நன்கொடையில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த 39.75% அதிகம் என்பது ஒரு தோற்றம்தான். TMC மையமாக இருக்கும் மேற்கு வங்கத்தில், 42 நாடாளுமன்ற தொகுதிகள் மட்டுமே உள்ளன. அதற்கு ரூ.1092 கோடி என்றால், 2019-தேர்தலில் 437 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. அதைப் போல் 10 மடங்குக்கு மேல் பெரிய கட்சி. பா.ஜ.க. ரூ.11,362 கோடிக்கு பத்திர நன்கொடை பெற்றால்தான், அதுவும் திரிணாமூல் கட்சியும் சமம் என்று அர்த்தம். தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியும் உள்ளது. ஆக 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தி.மு.க. ரூ.617 கோடி பெற்றது, பா.ஜ.க. பெற்ற தொகைக்குச் சமம் என்று கணக்கில் கொள்ளலாம். 21 MP தொகுதிகள் இருக்கும் ஒடிஸாவில் BJD பெற்ற ரூ.775 கோடி, 437 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க., கணக்கில் ரூ.16,000 கோடிக்கும் மேல். 14 MP இடங்கள் உள்ள தெலுங்கானா BRS பெற்ற ரூ.384 கோடி, 437 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. கணக்கில் கிட்டத்தட்ட ரூ.12,000 கோடி. எனவே பா.ஜ.க. அதிகம் பெற்றது என்பது வெறும் தோற்றமே தவிர உண்மையல்ல. 2019 தேர்தலில் 428 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு கிடைத்த ரூ.1123 கோடி என்பது குறைவுதான்.

காங்கிரஸ் ஏன் குறைவாகப் பெற்றது? செல்வாக்குள்ள திரிணாமூல், BJD, தி.மு.க. மூன்றும் பத்திரம் மூலம் கணிசமான நன்கொடைகளைப் பெற்றிருப்பது, அக்கட்சிகளின் செல்வாக்கை காட்டுகிறது என்றால், காங்கிரஸுக்கு நன்கொடை குறைவது அதன் செல்வாக்கு குறைவதைத்தான் காட்டும். மற்ற எதிர்க்கட்சிகள், மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதால், காங்கிரஸைவிட அக்கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் அதிகம் கிடைக்கிறது என்கிற வாதமும் தவறு. காரணம், அந்தக் கட்சிகளாவது அந்தந்த மாநிலங்களில்தான் ஆட்சியில் இருக்கின்றன. 2018- லிருந்து 2023 வரை பஞ்சாப், ராஜஸ்தான், சத்திஸ்கர், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. இன்றும் ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகம், தெலுங்கானா போன்ற நிதி ஏராளமாகக் கிடைக்கும் மாநிலங்களில் அக்கட்சி ஆட்சியில் இருக்கிறது.

பத்திரம் மூலம் நிதி பெறுவதில் பா.ஜ.க.வுக்கும் (காங்கிரஸ் தவிர) மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் இடையே வித்தியாசம் இல்லை. ஏன் காங்கிரஸ் மட்டும் பத்திரம் மூலம் நிதி பெறுவது குறைவாக இருக்கிறது? செல்வாக்குள்ள மாநிலக் காங்கிரஸ் தலைவர்கள் கட்சி நிதியை கட்சியிடம் கொடுக்காமல், தங்கள் கையிலேயே வைத்திருக்கிறார்கள் என்பதே இதற்குக் காரணம். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து ரொக்கமாகப் பிடிபட்டது இதை உறுதிப்படுத்துகிறது. பா.ஜ.க.வை விட காங்கிரஸுக்கு நன்கொடை குறைவு என்பது பத்திரத் திட்டத்தின் குறைபாடு என்று கூறமுடியாது.

தவறான முடிவு

தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மூன்று காரணங்களைக் கூறியிருக்கிறது. ஒன்று - யார் கொடுக்கிறார்கள் என்பது தெரியாததால், பத்திரத் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. இரண்டு - வாக்காளர்களின் தகவல் அறியும் உரிமையை மறுப்பதால், அது அரசியல் சாஸனத்துக்கு விரோதமானது. மூன்று - கொடுப்பது யார் என்று தெரியாததால், கொடுப்பவர்களுக்கு அரசாங்கம் ஏதாவது பிரதிபலன் செய்தால் அதுவும் யாருக்கும் தெரியாது. அரசியல் கட்சிகள் ரொக்கமாகப் பெறுவதில் மேலே கூறிய குறைகள் அனைத்துமே இருக்கின்றன. தவிர, கருப்புப் பணம் தேர்தலில் நுழைகிறது. கருப்புப் பணம் பெறும் கட்சி எவ்வளவு பெறுகிறது, எவ்வளவு செலவு செய்கிறது என்பதே தெரியாது. பத்திரம் மூலம் வரும் பணம் யாரிடமிருந்து வருகிறது என்று தெரியாதே தவிர, அது கருப்புப் பணம் அல்ல என்பது தெரியும்; கட்சிக்கு எவ்வளவு வந்தது என்றும் தெரியும். வாங்கிய கட்சி அதை எப்படிச் செலவழிக்கிறது என்பதும் தெரியும்.

ஒரு கட்சியோ, அதன் தலைவர்களோ ரொக்கமாக வாங்கிச் செலவழித்தால், வருவதற்கும் கணக்கு இருக்காது, செலவுக்கும் கணக்கு இருக்காது. பத்திரத் திட்டத்தில் பண வரவுக்கும் கணக்கு இருக்கும், செலவுக்கும் கணக்கு இருக்கும். பத்திரத் திட்டம் இல்லை என்றால் செக்கில் பணம் தருவது மிகக் குறைவாகவே இருக்கும். பத்திரம் இடத்தை ரொக்கம்தான் நிரப்பும், ரொக்கம் என்றால் மீண்டும் கருப்புப் பணம்தான் பரவும் என்பதை துரதிருஷ்டவசமாக உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. மத்திய - மாநிலத் தேர்தல்கள் ஒவ்வொன்றிலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் ரொக்கமாகப் பிடிபடுவதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது வருந்தத்தக்கது.

பத்திரத் திட்டத்தில் வெளிப்படை இல்லை என்ற ஒரே காரணம்தான், அதை ரத்து செய்ய நீதிமன்றம் கூறிய மற்ற இரண்டு காரணங்களுக்கும் அடிப்படை. வெளிப்படை என்பதை நேர்க் கோடிட்டுப் பார்ப்பது தவறு. எல்லாவற்றிலும் வெளிப்படை வேண்டும் என்று கூறும் உச்ச நீதிமன்றம், நீதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்கள் சொத்து விபரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று விதி செய்திருக்கிறது. ஆனால், அந்தச் சொத்து விபரங்களை நீதித்துறை வெளிப்படையாக வெளியிடுவதில்லை. ஏன்? அதில் சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், ஏதோ ஒரு இடத்தில் உண்மை பதிவாகிறது. அதுபோல் யார் பத்திர நன்கொடை கொடுத்தவர்கள் என்ற விபரத்தை, தேர்தல் பத்திரம் விற்கும் வங்கி (ஸ்டேட் பேங்க்) தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி, நீதிமன்றம் தேர்தல் பத்திரத் திட்டத்தைத் திருத்தி தீர்ப்பளித்திருக் கலாம்.

எளிதாக நிறுத்தக் கூடிய தவறைத் திருத்தாமல், தேர்தல் பத்திரத் திட்டத்தையே ரத்து செய்தது, குழந்தையை குளிப்பாட்டிய தொட்டியில் இருக்கும் நீரை, குழந்தையுடன் தூக்கி வீசியது போன்ற செயல் என்பதே நம் கருத்து. இதுபோன்ற தவறான தீர்ப்புகள் வரக் காரணங்கள் இரண்டு. ஒன்று - அரசியல் யதார்த்தம் தெரியாத அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள் பத்திரத் திட்டத்தை தொடர்ந்து பழித்து, நீதிமன்றத்தின் மீது அழுத்தம் கொடுத்தது. இரண்டு - நெளிவு சுளிவுடன் அரசியலை நீதிமன்றம் நேர்கோடிட்டுப் பார்த்தது. எந்த வகையில் பார்த்தாலும் இது தவறான தீர்ப்பு. பத்திரத் திட்டத்தின் மூலம் தேர்தல்களில் படிப்படியாக குறைந்து வரும் கருப்புப் பணம், மீண்டும் சுனாமி போல் எழ இந்தத் தீர்ப்பு வகைசெய்திருக்கிறது என்பதே நம் கருத்து.

Note to the Reader: This article originally appeared in Thuglak Tamil Weekly Magazine www.gurumurthy.net. It has been reproduced in Asianet News Network.

Tap to resize

Latest Videos

click me!