அந்த நபர் டாக்டரிடம் கூறிய பதில் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. நாணயங்களில் இருக்கும் துத்தநாகம் உடலைக் கட்டமைக்க உதவுகிறது என்றும் காந்தம், நாணயம் ஆகியவை குடலில் இருந்தால் அவை துத்தநாகத்தை உறிஞ்சுவதற்கு உதவும் என்றும் நினைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த சர் கங்காராம் மருத்துவமனை மருத்துவர்கள் ஸ்கிசோஃப்ரினியா நோயாளியான 26 வயது இளைஞரின் குடலில் இருந்து 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை வெற்றிகரமாக அகற்றியுள்ளதாகக் கூறியுள்ளனர். பாடி பில்டிங்கில் ஆர்வம் கொண்டிருந்த அவர், துத்தநாகம் உடற்கட்டை உருவாக்க உதவும் என்று கருதி அவற்றை விழுங்கியுள்ளார் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
டெல்லியில் வசிக்கும் அவர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்றார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
undefined
லேப்ராஸ்கோபிக், லேசர் மற்றும் பொது அறுவை சிகிச்சை மருத்துவர் தருண் மிட்டல் இது குறித்துப் பேசுகையில், 1, 2 மற்றும் 5 ரூபாய் மதிப்புள்ள 39 நாணயங்களும், ஹார்ட்டீன், கோளம், நட்சத்திரம், புல்லட் மற்றும் முக்கோணம் போன்ற பல்வேறு வடிவங்களின் 37 காந்தங்களும் அறுவை சிகிச்சையின்போது அவரது உடலில் இருந்து அகற்றப்பட்டன.
ஏன் அவற்றை உட்கொண்டீர்கள் என்று கேட்டபோது, அந்த நபர் டாக்டரிடம் கூறிய பதில் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. நாணயங்களில் இருக்கும் துத்தநாகம் உடலைக் கட்டமைக்க உதவுகிறது என்றும் காந்தம், நாணயம் ஆகியவை குடலில் இருந்தால் அவை துத்தநாகத்தை உறிஞ்சுவதற்கு உதவும் என்றும் நினைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பொருள்களை உட்கொள்வது உயிருக்கு ஆபத்தானது, இப்படிச் செய்யவே கூடாது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன் என மருத்துவர் மிட்டல் எச்சரித்துள்ளார்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, நோயாளி 20 நாட்களுக்கும் மேலாக மீண்டும் மீண்டும் வாந்தி மற்றும் வயிற்றில் வலி இருப்பதாக புகார் கூறி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரால் எதுவும் சாப்பிட முடியவில்லை. கடந்த 20-22 நாட்களுக்கு முன்பு அவர் நாணயங்கள் மற்றும் காந்தங்களை உட்கொண்டதாக அவரது உறவினர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்தனர்.
அவர்கள் அவரது வயிற்றின் எக்ஸ்-ரேயை வழங்கினர். அது நாணயங்கள் மற்றும் காந்தங்களின் வடிவங்களைக் காட்டியது. இதனால் அவருக்கு CT ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் அவரது வயிற்றில் நாணயங்கள் மற்றும் காந்தங்கள் இருப்பது உறுதியானது. இதனால் அவருக்கு குடல் அடைப்பு ஏற்பட்டிருந்தது.
உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது, சிறுகுடலில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் காந்தங்கள் மற்றும் நாணயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் எக்ஸ்ரே எடுத்து அனைத்து நாணயங்கள் மற்றும் காந்தங்கள் அகற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையை டாக்டர் மிட்டல், ஆலோசகர்கள் டாக்டர் ஆஷிஷ் டே மற்றும் டாக்டர் அன்மோல் அஹுஜா, மருத்துவ உதவியாளர் டாக்டர் விக்ரம் சிங் மற்றும் ரெசிடென்ட் டாக்டர்கள் டாக்டர் தனுஸ்ரீ மற்றும் டாக்டர் கார்த்திக் உள்ளிட்ட மருத்துவர்கள் குழு மேற்கொண்டது.