
சிறுமியின் இதய ஆபரேஷனுக்காக அவரை திருவனந்தபுரத்தில் இருந்து வேலூருக்கு எட்டரை மணி நேரத்தில் கொண்டு வந்து சேர்த்த டிரைவரும், போலீசாரும் பலரின் பராட்டுகளை பெற்று வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புற்றுநோய் மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு இரண்டு வயது சிறுமி புற்று நோய் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவசரமாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவரது உயிரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அந்த சிறுமியை அனுமதித்து அறுவை சிகிச்சை செய்யவும் மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் 9 மணி நேரத்திற்குள் அந்த சிறுமியை அங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து கேரள போலீசார் மற்றும் தமிழக போலீசார் இணைந்து சிறுமியை அழைத்துக் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெருக்கடியில் சிக்காமல் செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன்படி திருவனந்தபுரம்- வேலூர் பயணப்பாதையில் உள்ள ரோந்து போலீசார், போக்குவரத்து போலீசார் ஆகியோருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி நேற்று இரவு 7.45 மணிக்கு திருவனந்தபுரம் மருத்துவமனையில் கிளம்பிய ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில் இன்று அதிகாலை 4.10 மணிக்கு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையை சென்றடைந்தது.
இதனால் ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.