
வங்கிக் கணக்கு, பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும் வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு அடையாள எண்ணை வழங்கும் வகையில் காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஆதார் அடையாள அட்டை திட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு அப்போது எதிர்க்கட்சியாக பா.ஜ.க. கடும் கண்டனத்தை பதிவு செய்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது தொடர்பாக அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்றன.
எதிர்க்கட்சியாக பா.ஜ.க. இருந்த போது ஆதாரை எதிர்த்த பா.ஜ.க. மத்தியில் ஆட்சியைப் பிடித்ததும், ஆதாரை அரசின் அனைத்து திட்டங்களுக்கும் கட்டாயப்படுத்தி வருகிறது. சமையல் எரிவாயு மானியம் என இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதாரை கட்டாயப்படுத்தகத் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் வங்கி கணக்கு, பான்கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றிலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.