
நாக்பூர் அருகே உள்ள அணையில் படகு சவாரியின்போது எழுந்து நின்று செல்பி எடுக்க முயன்றதால் படகு கவிழ்ந்து 7 பேர் பரிதாபமான உயிரிழந்தனர்.
நாக்பூர் மாவட்டம் கம்லேஷ்வரில் வேனா அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கு நாக்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட சில இளைஞர்கள் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் அங்கு சென்றனர். இந்த அணையில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும் ஆர்வம் மிகுதியில் உள்ளூர் மீனவர்களுக்கு பணம் கொடுத்து படகு ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். மிகவும் குறுகலான அந்த படகில், அணையின் மையப்பகுதிக்கு வாலிபர்கள் சென்றனர். படகில் 3 படகோட்டிகள் உள்பட 11 பேர் இருந்தனர். படகை அணையின் மையப்பகுதியில் நிறுத்தி, ஆர்வமிகுதியில் வாலிபர்கள் உற்சாகம் பொங்க ‘செல்பி’ எடுத்தனர். அப்போது, திடீரென படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்தவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் படகோட்டிகள் 3 பேரையும் உயிருடன் மீட்டனர். இரவில் ஒருவரது உடல் மீட்கப்பட்டது.
இந்த தேடும் பணிகள் நேற்றும் தொடர்ந்த நிலையில், காலையில் மேலும் 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. அதில் இரண்டு பேரின் உடல் அடையாளம் காணப்பட்டது. அவர்கள் பெயர் ராகுல் ஜாதவ் மற்றும் அன்கித் பூஷேகர்.
இந்த நிலையில், இரவில் மேலும் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். இதுவரை 7 பேரது உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவரும் அணையில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வாலிபர்களின் செல்பி மோகத்தால் விளைந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.