
கர்நாடக மாநிலம், காடக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய கால் தடம் இருந்தது கண்டு, வேற்றுகிரகவாசிகள் வந்துவிட்டதாக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல், முடங்கினர்.
காடக் மாவட்டத்தில் அந்துரு கிராமம் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2மணி அளவில் ஏதோ மிகப்பெரிய விலங்கினம் மூச்சு விடுவது போன்ற சத்தத்தை கேட்டுள்ளனர். பின், காலையில் கிராமத்தை நோட்டம் விட்டபோது, 20 முதல் 30 அடிநீளத்தில் கால் தடம் இருப்பது கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வேற்றுகிரகவாசிகள் கிராமத்துக்குள் புகுந்துவிட்டதாக ஏற்பட்ட வதந்தியால், அக்கம்பக்கம் கிராம மக்கள் பீதியடைந்து வீடுகளுக்குள் முடங்கினர்.
இந்த காலடித் தடத்தை பார்க்க ஏராளமானோர் வந்ததால், அந்த தடம் பல இடங்களில் அழிந்துவிட்டது என்று உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். ஆனால், அதிகாலையில் கிராம மக்கள் பார்த்தபோது, ஏதோ வித்தியாசமான காலடித் தடமாக அது இருந்தது என மக்கள் தெரிவிக்கிறார்கள்.
அந்துரு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “ வேற்றுகிரகவாசிகள் யாரேனும் வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில், பெண்களும், குழந்தைகளும் வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கிறார்கள். போதிகால் மடத்தின் அருகே அந்த வேற்றுகிரகவாசியின் காலடித்தடம் இருந்தது. இரு தடத்துக்கும் இடையே 3 அடி வித்தியாசம் இருந்தது. இது குறித்து வனத்துறைக்கும் தகவல் கொடுத்தோம்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, கிராமமக்களின் அச்சத்தை போக்கும் வகையில், வனத்துறையினர் 2 நாட்களுக்கு ரோந்துப்பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், வனத்துறையினர் தரப்பில் கூறுகையில், “ அப்படி ஒன்று காலடி தடத்தை ஏதும் நாங்கள் பார்க்கவில்லை. யாரேனும் கிராம மக்களை மிரட்டும் வகையில் விஷமம் செய்துள்ளார்களா என்பதையும் விசாரி்க்க வேண்டும்” என்றனர்.