
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கும், பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடும், பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளைக்கும் 13 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பால் பவுடர், உயிர்காக்கும் மருந்துகளும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி பொறுப்பேற்று அதிபரும் பிரதமரும் பதவி விலகக்கோரி மக்கள் தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் இன்னல்படும் தமிழர்களுக்கு உதவ அனுமதி தர வேண்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். இதனிடையே இதுக்குறித்து இலங்கையில் தமிழர்கள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பு மக்களுக்கு தமிழக அரசு உதவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இலங்கையில் தமிழ் மக்களுக்கு மட்டும் தமிழக அரசு உதவிகளை வழங்கினால் பிளவு ஏற்படும் என்றும் தமிழ்நாடு முதல்வர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது.
மேலும் தற்போது இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அது மாத்திரமின்றி சிங்கள மக்கள் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரும் நிலை உருவாகி இருப்பதுடன் அனைவரும் ஒன்றிணைந்து தமது உரிமைகளுக்காகப் போராடுகின்றார்கள். எனவே, ஒரு சுமுகமான சூழ்நிலை உருவாகி வரும் போது தமிழ் மக்களுக்கு மாத்திரம் உதவிகளை வழங்குவது இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்திவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்த இலங்கை எம்.பி சுமந்திரன் கூறியிருந்தார்.
தமிழக சட்டசபையில் இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கும் இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் சார்பில் ரூ.80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்புள்ள 137 வகையான மருந்து பொருட்கள், ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை வழங்க தீர்மானித்துள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்ச்ர் கூறினார்.
இச்சூழலில், எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்புவது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக எங்களின் உடன்பிறவா சகோதரராகிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று இலங்கை தமிழ்தேசிய கூட்டமைப்பு சேர்ந்த இலங்கை எம்.பி சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கைக்கு உணவு பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ள தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுவதாக இலங்கை எம்.பியும் முன்னாள் இலங்கை இராசாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.