
தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியத்தை விளம்பரப்படுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.
மனு தாக்கல்:
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளன. தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்கிய நடைமுறை அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கை என்று அறிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கினை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.என். ராவ் மற்றும் பி.ஆர். கவாய் விசாரித்து வந்தனர். அதன்படி வழக்கின் அனைத்து தரப்பினர் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்து இருந்தனர். அதன் படி இன்று தீர்ப்பை வழங்கினர்.
தீர்ப்பு:
அதன்படி "தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பொது இடங்களில் அனுமதிக்க மறுக்கும் உத்தரவை மாநில அரசாங்கங்கள் நீக்க வேண்டும். பொது மக்கள் நலன் கருதி சில கொள்கைகளை உருவாக்கி மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்க முடியும். ஆனால் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை அறிவுக்கு ஒவ்வாத ஒன்று என கூற முடியாது," என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், சுகாதாரத் துறையை சேர்ந்த பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதை அடுத்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கின. அதன்படி தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
தடுப்பூசி:
நாடு முழுக்க இதுவரை சரியாக 189 கோடியே 23 லட்சத்து 98 ஆயிரத்து 347 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 170 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுதவிர இந்கியாவில் கொரோனா பாதிப்பை அறிந்து கொள்ள நேற்று மட்டும் 2 லட்சத்து 95 ஆயிரத்து 588 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை நாடு முழுக்க 83 கோடியே 82 லட்சத்து 08 ஆயிரத்து 698 பேருக்கு கொரோனா பரிசோகோனை நடத்தப்பட்டு உள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து இருக்கிறது.