தேர்தல் ஆணையம் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதித்தது என்ன..? தம்பிதுரை தகவல்

By karthikeyan VFirst Published Aug 27, 2018, 1:47 PM IST
Highlights

தேர்தல் ஆணையம் கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட சாராம்சங்கள் குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விளக்கமளித்துள்ளார். 
 

தேர்தல் ஆணையம் கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட சாராம்சங்கள் குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விளக்கமளித்துள்ளார். 

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உட்பட 4 மாநில சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே மத்திய அரசு, மக்களவை தேர்தலுடன் அனைத்து மாநில சட்டமன்ற தேர்தலையும் நடத்த முயற்சித்து வருகிறது. அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. மேலும் மின்னணு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறுவதால் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 51 மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் பிராதன கட்சிகளான அதிமுக மற்றும் திமுக சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதிமுக சார்பில் தம்பிதுரை மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோரும் திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவனும் கலந்துகொண்டனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்ட விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது, புதிய வாக்காளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தால், அதில் 2 முதல் 3% வரையிலான வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்படுகிறது. அந்த நிலையை மாற்றி, அனைத்து புதிய வாக்காளர்களின் பெயர்களையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார். 

அதேபோல் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் அதிகமான பணத்தை செலவு செய்வதை தடுக்க அரசாங்கமே செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் மட்டும்தான் கட்சிகள் அதிகமான செலவு செய்வதை தடுக்க முடியும் என கட்சிகள் வலியுறுத்தியதாக கூறினார். 

அதேபோல தொலைக்காட்சிகளில் காசு கொடுத்து சில கட்சிகள் பிரசாரம் செய்வதை தடுக்கும் வகையில், தூர்தர்ஷனில் மட்டும் அனைத்து கட்சிகளுக்கும் நேரம் ஒதுக்கி பிரசாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தம்பிதுரை தெரிவித்தார். 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதால், வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பான அதிமுகவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, மின்னணு வாக்குப்பதிவாக இருந்தாலும் சரி, வாக்குச்சீட்டு முறையாக இருந்தாலும் சரி, அதிமுகவிற்கு எந்த பிரச்னையும் இல்லை எனவும் ஆனால் எதுவாக இருந்தாலும் நியாயமான முறையில் நடப்பதுதான் தங்களுடைய நிலைப்பாடு எனவும் தம்பிதுரை தெரிவித்தார். ஜெயலலிதா, வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்திய நிலையில், தம்பிதுரை எதுவாக இருந்தாலும் பிரச்னையில்லை என செய்தியாளர்களிடம் பதிலளித்தார். 
 

click me!