மீண்டும் தொடங்கியது மழை… அச்சத்தில் கேரள மக்கள் !! பாதிக்கப்படும் மறுசீரமைப்பு பணிகள்…

By Selvanayagam PFirst Published Aug 27, 2018, 10:26 AM IST
Highlights

பேய் மழைக்குப் பிறகு கடந்த ஒரு வாரமாக மழை முற்றிலும் ஓய்ந்திருந்த நிலையில் கேரளாவில் தற்போது மீண்டும் சாரல் மழை தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். சிறிதாக பெய்யும் சாரல் மழைதான் பெரும் நிலச்சரிவை உண்டாக்கும்  என்பதால் என்னசெய்வதென்றே தெரியாமல் மக்கள் திகைத்து வருகின்றனர்.

கடந்த மே மாத இறுதி வாரத்தில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்ததால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய அணையான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது.

ஆனால் இம்மாதம் 8 ஆம் தேதிக்குப் பிறகு கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மழை கொட்டித் தீர்த்தது. 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். 100 க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளம் என இதில் சிக்கி 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடவுளின் தேசம் என்று அறியப்பட்ட கேரளா சின்னாபின்னமாகிப் போனது. இதையடுத்து கேரளா பெரும் பாதிப்பிலிருந்து மீண்டு வர பல்வேறு உதவிக் கரங்கள் நீண்டுள்ளன. கேரளாவிற்கு உதவிகள் குவிந்து வருகின்றன.

எத்தனை கோடிகள் வந்து குவிந்தாலும், கேரள மாநிலம் மீண்டும் புத்துயிர் பெற கொஞ்ச காலம் ஆகும் என்பதே உண்மை. தற்போது அங்கு ஆட்சியில் இருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் அரசு மறு சீரமைப்பு வேலைகளை புயல் வேகத்தில் பார்த்து வருகிறது.

முதலமைச்சர் பினராயி விஜயனும் அதி விரைவில் கேரளம் பாதிப்பில் இருந்து மீளும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து இயல்பு வாழ்க்கை திருப்பி வருகிறது.  ஓரளவு போக்கு வரத்தும் சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை முதல் கேளராவில் மீண்டும் சாரல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அச்சமைடையத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே கனமழையால் மாநிலம் முழுவதும் நிலம் ஈரத்துடன் உள்ள நிலையில் தற்போது பெய்து வரும் சாரல் மழை நிலச்சரிவை ஏற்படுத்துமோ என திகைத்துப் போயுள்ளனர்.

click me!