கேரள மாநிலத்தில் டெட்ரா பாக்கெட்டில் மதுபான விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மது விலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், கண்ணாடி பாட்டில்களில் மது விற்பனை செய்வதற்கு மாற்றாக, காகிதக் குடுவைகளில் மது விற்பனை செய்வதால் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மது அருந்துபவர்கள் காலியான மதுப்புட்டிகளை கண்ட இடங்களில் வீசுவதால் சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளையும், ஆபத்துகளையும் ஒப்பிடும் போது காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறைவு. அதாவது சாஷே பாக்கெட்டுகள் போன்று இருக்கும் டெட்ரா பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்வது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஆபத்தை குறைக்கு என்கிறார்கள்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் மதுவகைகள் கண்ணாடி புட்டிகளில் அடைத்து விற்கப்படுவதற்கு மாற்றாக காகிதக் குடுவைகளில் (Tetra Pack) அடைத்து விற்கப்படவுள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் தமிழக அரசு அறிவித்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானம் விற்பனை செய்வதால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கேரள மாநிலத்தில் டெட்ரா பாக்கெட்டில் மதுபான விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் சில்லரையாகவும் மொத்தமாகவும் மது விற்பனை செய்யும் தனிப்பட்ட அதிகாரம் கொண்ட அமைப்பாக, வரையறுக்கப்பட்ட கேரள மாநிலப் பானங்கள் கழகம் (Kerala State Beverages Corporation Ltd-BEVCO) கேரள அரசிற்கு சொந்தமான பொதுவுடமைத் தொழில் நிறுவனம் உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் டாஸ்மாக் (TASMAC) போன்று கேரளாவில் பெவ்கோ (BEVCO). கேரள மாநிலத்தில் அதிக இலாபம் தரும் பொது நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
திருப்பதிக்கு ஜன.1 வரை டோக்கன் இல்லாத பக்தர்கள் வரவேண்டாம்: தேவஸ்தானம் அறிவிப்பு!
இந்த பெவ்கோ சார்பில் டெட்ரா பாக்கெட்டில் கேரளாவில் மதுபான விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 90 எம்.எல். கொண்ட ஒரு பாக்கெட் விலை ரூ.35 என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கேரள மாநிலத்தில் 3 நாட்களில் ரூ.154 கோடியே 77 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக கேரள அரசு மதுபான விற்பனை கழகமான பெவ்கோ தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.