திருப்பதியில் இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்ததால் ஜனவரி 1ஆம் தேதி வரை பக்தர்கள் வரவேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் புகழ்பெற்றது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு, விடுமுறை காலம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா போல வைகுண்ட ஏகாதசி விழாவும் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில், டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி, ஏழுமலையான் கோயிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல்சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. புரோட்டோகால் விஐபிக்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும் எனவும், 10 நாள்கள் வரை விஐபி பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் தரிசனம், விடுமுறை காலம் என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்த நிலையில், ஜனவரி 1ஆம் தேதி வரை பக்தர்கள் வரவேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
தூத்துக்குடியில் தனிக்கவனம் செலுத்தும் தமிழிசை: தேர்தல் அரசியலுக்கு திரும்புகிறாரா?
திருப்பதியில் இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்ததால் ஜனவரி 1ஆம் தேதி வரை பக்தர்கள் வரவேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. திருப்பதியில் பக்தர்கள் ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர். இலவச தரிசனத்திற்காக ஒரு நாளைக்கு 43 ஆயிரம் டோக்கன்கள் என 10 நாட்களுக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச சர்வ தரிசன டோக்கன்கள் கடந்த 22ஆம் தேதி மதியம் 2 மணி முதல் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது. அதன்படி, திருப்பதியில் 9 மையங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஜனவரி 1ஆம் தேதி வரை சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன்கள் மற்றும் ரூ.300 தரிசன டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. இதன் காரணமாக ஜனவரி 1ஆம் தேதி வரை தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வரவேண்டாம். டோக்கன் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய முடியாது. இலவச தரிசன டோக்கன்கள் ஜனவரி 2ம் தேதி முதல் மீண்டும் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தொடர் விடுமுறையையொட்டி திருப்பதிக்கு வர ஆயத்தமாகும் பக்தர்கள், அதற்கு ஏற்ப தங்களின் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளும்படியும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.