ரூ.10 நோட்டுகளாக கொள்ளை அடித்து கார் வாங்கிய திருடர்கள்

First Published Dec 11, 2016, 3:02 PM IST
Highlights


உத்தரப்பிரதேச மாநிலம், சஹாரான்பூர் மாவட்டத்தில் ஸ்டேட் வங்கியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான ரூ.10, ரூ 20 நோட்டுகளை கொள்ளையடித்து கார் வாங்கி சொகுசாக இருந்த 4 கொள்ளையர்களில் ஒருவர் போலீசிடம் சிக்கினார்.

மோடி அறிவிப்பால் பாதிப்பு

பிரதமர் மோடி, நாட்டில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடைசெய்து கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்தார். அதில் இருந்து, சஹாரான்பூர்மாவட்டம், மலாக்காபூர் ஹூசைன் கிராமத்தில் கடும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அன்றாடச் செலவுகளுக்கே கடுமையாக திண்டாடினர்.விவசாயிகள் விதைகள், உரங்கள் வாங்க முடியாமலும், வர்த்தகர்கள் விற்பனை இல்லாமலும் பெரும் சிரமப்பட்டனர்.

4 பேர்

இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த, 4 இளைஞர்களான நசீர், ராக்கேஷ், அப்சல் மற்றும் டிடூ ஆகியோர் மிகவும் அதிகமாகச் செலவு செய்துள்ளனர்.

மக்கள் புகார்

இவர்கள் 4 பேரும் வேலைக்கு எங்கும் போகாத நிலையில், இவர்களுக்கு பணம் எப்படி கிடைத்தது என ஊர்மக்கள் யோசிக்கத் தொடங்கினர். இதையடுத்து, போலீசுக்கு ஊர்மக்கள் தகவல் கொடுத்தனர். ஊரில் உள்ளவர்கள் கையில் பணம் இல்லாமல் இந்த நான்கு இளைஞர்கள் எளிதாக ரூ.20, ரூ.10 நோட்டுகளை எளிதாகக் கடையில் கொடுத்து செலவு செய்து வருகின்றனர் எனவும் போலீசிடம் தெரிவித்தனர்.

கைது

இதையடுத்து,  அந்த 4 இளைஞர்களில், நசீர் என்பவரை மட்டும் போலீசார் கைது செய்தனர், 3 பேரும் தப்பி விட்டனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

கொள்ளை

அது  குறித்து போலீஸ் சூப்பிரெண்டு ராபிக் அகமது கூறுகையில், “ கடந்த நவம்பர் 19-ந்தேதி மலாக்காபூர் கிராமத்தில் உள்ள பாரத ஸ்டேட்வங்கியை இந்த 4 பேரும் கொள்ளை அடித்துள்ளனர். வங்கியில் இருந்த பணத்தில் 10, 20 ரூபாயாக ரூ.10 லட்சத்தை எடுத்துக் கொண்டு வந்து விட்டனர். இது குறித்து வங்கி சார்பில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அது குறித்து போலீசார் விசாரணை செய்தும் வருகின்றனர்.

சாக்கு பையில்

இந்த 4 பேரும் கொள்கை அடித்த பணத்தில் மிகவும் சொகுசாக வாழ்க்கை நடத்தி இருக்கிறார்கள். சாக்குப் பையில் பணத்தை வைத்துெசலவு செய்துள்ளனர். அதில் ரூ.10 நோட்டுகளாகக் கொடுத்து, ஒரு கார் வாங்கி அதை ஓட்டி வந்துள்ளனர். இப்போது அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளோம், மற்ற 3 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைத் தேடி வருகிறோம்''  என்று தெரிவித்தார்.

click me!