ஐதராபாதில் மெட்ரோ ரெயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

First Published Nov 28, 2017, 9:39 PM IST
Highlights
Telangana State 30 km from Hyderabad Prime Minister Narendra Modi launched the first front metro rail service.


தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் 30 கி.மீ. தொலைவுக்கு முதல்கட்ட மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

30 கி.மீ சேவை

தெலங்கானா அரசு சார்பில் ரூ.1,400 கோடி திட்டமதிப்பீட்டில் ஐதராபாத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 30 கி.மீ தொலைவுக்கு மியாபூர் மற்றும் நகோலி இடையே தொடங்கப்பட்டுள்ளது. இந்த இரு ரெயில் நிலையங்களுக்கும் இடையே 24 நிறுத்தங்கள் உள்ளன.

மோடி வருகை

ஐதராபாத்தில் நடக்கும் உலக தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்கவும், மெட்ரோ ரெயில் சேவையையும் தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று வந்தார். அவருக்கு விமானநிலையத்தில் முதல்வர் சந்திரசேகர் ராவ், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றினர்.

தொடங்கி ைவத்தார்

அதன்பின், மியாபூர் மெட்ரோ ரெயில்நிலையத்தில் இருந்து ரெயில் சேவையை பிரதமர் மோடி ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.

மியாபூர் ரெயில்நிலையத்தில் இருந்து குக்காட்பள்ளி ரெயில் நிலையம் வரை பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டனர்.

கூட்டுறவு கூட்டாட்சி

அதன்பின், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது, “ நாங்கள் கூட்டுறவு கூட்டாட்சியில் நம்பிக்கை வைத்துள்ளோம். பா.ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலம்,  ஆட்சி செய்யும் மாநிலம் என வேறுபாடு காட்டப்படும் என்ற கேள்விக்கே இடமில்லாமல் மத்திய அரசு செயல்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதே எங்கள் இலக்காகும்.

இன்று உலகின் கவனம் ஐதராபாத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது. இந்த நகரம் பெருமைமிக்க, கவுரவம் மிக்க உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்’’ என்று பேசினார்.

அதிகபட்சம் ரூ.60 கட்டணம்

முதல்கட்ட மெட்ரோ சேவையின் கட்டணமாக குறைந்தபட்சம் 10 ரூபாயும், அதிகபட்சமாக 60 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள்டோக்கன் தவிர்த்து ஸ்மார்ட்கார்டு மூலம் பயணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 6 மணிக்கு தொடங்கும் மெட்ரோ ரெயில் சேவை இரவு 10 மணி வரையிலும் இயக்கப்படும். மெட்ரோ ரெயில் ஸ்மார்ட் கார்டு மூலம், அரசுபஸ்களிலும், புறநகர் ரெயில்களிலும் பயணிக்கும் திட்டத்தையும் விரைவில் தெலங்கானா அரசு செயல்படுத்த உள்ளது.

வசதிகள்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள், பயணிகள் எளிதாகச் சென்றுவர இடவசதி, டிக்கெட்வழங்கும் அகலமான இடம், மிகப்பெரிய ‘லிப்ட்’ பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் லிப்ட் பட்டன்கள், வழிகாட்டி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

click me!