
மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இதனால், அம்மாநிலத்துக்கு நடப்பாண்டில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தெலங்கானா முதல்வரும், பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவருமான கே. சந்திரசேகர ராவ் அக்கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 115 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் சந்திரசேகர ராவ், கஜ்வெல் மற்றும் கம்மாரெட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருகிற அக்டோபர் 16ஆம் தேதியன்று வாராங்கலில் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் எனவும் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். “அக்டோபர் 16-ம் தேதி வாரங்கலில் எங்களது கட்சி அறிக்கையை வெளியிடுவோம். கட்சி விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.” எனவும் கேசிஆர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 2014, ஜூன் 2ஆம் தேதி புதிய மாநிலமாக தெலங்கானா உதயமானது. அதே ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, புதிய மாநிலமாக உருவான தெலங்கானாவின் முதல் முதல்வராக சந்திரசேகர் ராவ் பொறுப்பேற்றார். தெலங்கானா மாநிலம் உருவாக்கத்துக்கு கடுமையான போராட்டங்களை முன்னெடுத்த அவரே தற்போதும் முதல்வராக பதவியில் நீடித்து வருகிறார்.
பிரிக்ஸ் மாநாட்டில் மோடி, ஜி சந்திப்பு? எல்லையில் பதற்றம் தணிக்க இருதரப்பில் பேச்சுவார்த்தை!!
தெலங்கானா மாநில முதல்வராக எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருக்கும் கே.சந்திரசேகர ராவ், முதல் ஆட்சிக்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். முதல் ஆட்சி காலத்தின் பதவிக்காலம் முடிவதற்குள்ளாகவே அதாவது 9 மாதத்திற்கு முன்பே ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்தித்து மீண்டும் வெற்றி பெற்றார். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த தேர்தலில் 119 தொகுதிகளில் களம் கண்ட கேசிஆரின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, 102 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையாக உருவெடுத்தது.