காங்கிரஸ் கட்சியுடன் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியை இணைத்துக் கொள்வது தொடர்பாக இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை ஷர்மிளா சந்தித்துப் பேசினார்.
காங்கிரஸ் கட்சியுடன் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியை இணைக்க கட்சித் தலைவர் ஷர்மிளா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. சமீபத்தில் அவர் கர்நாடாகா துணை முதல்வர் டிகே சிவகுமாரை சந்தித்து பேசி இருந்தார். இது காங்கிரஸ் கட்சியில் அவர் சேர இருக்கிறார் என்பதற்கான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.
டெல்லியில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை ஷர்மிளா சுமார் முப்பது நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். 10 ஜன்பாத்தில் இருக்கும் சோனியா காந்தியின் இல்லத்திற்கு வந்த ஷர்மிளா நேரடியாக வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இந்த சந்திப்பு நடந்தது.
undefined
ஆந்திராவின் மறைந்த முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா. இவரது சகோதரர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திராவின் முதல்வராக இருக்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டு, ஜூலை மாதத்தில் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா என்ற பெயரில் ஷர்மிளா கட்சியை துவக்கி இருந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொள்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்த விஷயத்தில் காங்கிரஸ் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. நடப்பாண்டின் இறுதியில் தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியுடன் இணைவதற்கு ஷர்மிளா முயற்சித்து வருகிறார். இவரது சகோதார் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் ஷர்மிளாவுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்று கூறப்படுகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் 119 சட்டசபை இடங்களுக்கான தேர்தலில் வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரத் ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து சிலர் விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இருந்தனர். முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சியை நீக்க வேண்டும் என்று மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளது காங்கிரஸ். 2014ஆம் ஆண்டில் தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதில் இருந்து காங்கிரஸ் கட்சியால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி அவ்வப்போது மக்களை சந்தித்து பேசி வருகின்றனர்.
சந்திப்புக்குப் பின்னர் பேட்டியளித்து இருந்த ஷர்மிளா, ''நான் இன்று சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்தேன். எங்களது சந்திப்பு மிகவும் மிகவும் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆரின் கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது'' என்றார்.