பிரதமர் மோடி சென்ற விமானத்தில் கோளாறு.. ஜெர்மனியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது!!

By Asianet TamilFirst Published Sep 21, 2019, 4:34 PM IST
Highlights

அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்ற பிரதமர் மோடியின் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜெர்மனியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

நேற்று இரவு டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு 7 நாட்கள்  அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். செல்லும் வழியில் இந்த விமானம் ஜெர்மனியில் இருக்கும் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த கோளாறை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் 2 மணி நேர தாமதத்திற்குப் பிறகு தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு அமெரிக்காவை நோக்கி புறப்பட்டுச் சென்றது.

இந்த நிலையில் இன்று மாலை டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஹவுஸ்டன் நகருக்கு பிரதமர் மோடி செல்கிறார். நாளை அங்கு நடைபெறும் ஹவுதி மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பாக பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. சுமார் 50,000 பேர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்ள இருக்கிறார். வெள்ளை மாளிகை வரலாற்றில் வாஷிங்டன் டிசி-யை தவிர்த்து இரு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது .


.
இதையடுத்து 23ஆம் தேதி ஐக்கிய நாடுகள் அவையில் பருவநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். அதன்பிறகு 24-ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்து பல முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கும் பிரதமர் மோடி, நியூயார்க் நகரத்தில் நடைபெறும் 74- வது ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்திக்க உள்ளார். 

7 நாள் அரசுமுறைப் பயணத்தை முடித்துக்கொண்டு 27 ஆம் தேதி இந்தியா திரும்புகிறார் பிரதமர் மோடி.

click me!