தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் கொண்டுசெல்லப்பட்ட ஹைட்ரஜன் பெராக்சைடு கலந்த பாலை கேரள பால்வள மேம்பாட்டுத்துறை பறிமுதல் செய்துள்ளது.
தமிழகத்திலிருந்து கலப்பட பால் கேரளாவுக்குக் கடத்தப்படுவதாக கேரள மாநில பால்வள மேம்பாட்டுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. கேரளாவின் ஆரியங்காவு சோதனைச் சாவடி வழியாக கடத்தல் நடைபெறுகிறது என்றும் தெரிந்தது.
இதன் பேரில் தென்காசியில் இருந்து பந்தளம் நோக்கி பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியை சோதனையிட்டனர். அதில் ஹைட்ரஜன் பெராக்சைடு கலந்த பால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த டேங்கர் லாரியில் இருந்த பாலின் அளவு 15,300 லிட்டர் எனவும் தெரியவந்தது.
அந்த லாரியில் இருந்த பால் விருதுநகர் மாவட்டம் வாடியூர் கிராமத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாகவும் பட்டணம்திட்டாவில் உள்ள பண்டலத்துக்குச் சென்றுகொண்டிருந்தது எனவும் விசாரணையில் தெரிந்திருக்கிறது. லாரியை புனலூர் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
லாரியில் உள்ள பாலின் ஹைட்ரஜன் பெராக்சைடு எவ்வளவு கலக்கப்பட்டது என்பதை அறிந்துகொள்ள பாலின் மாதிரி திருவனந்தபுரத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
“ஆய்வு முடிவு இன்றே கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம். ஆய்வு முடிவின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கையை எடுப்போம். தொடர்ந்து சோதனையைத் தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்” என கொல்லம் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சுஜித் தெரிவித்துள்ளார்.