மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவு சீட்டுகள் அம்போ... 27% இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!

By Asianet TamilFirst Published Jun 3, 2020, 10:13 PM IST
Highlights

மனுவில், “மருத்துவ படிப்புக்கான இடங்களில்  50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். ஓபிசி, பிசி , எம்பிசி பிரிவினருக்கு இந்த இடங்களை ஒதுக்க வேண்டும். நடப்பாண்டிலேயே இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அகில இந்திய தொகுப்பில் 27 சதவீத இடத்தை ஓபிசி பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

அகில இந்திய தொகுப்பில் 27 சதவீத இடத்தை ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் நீட் தேர்வு மூலம் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) சுமார்  11 ஆயிரம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், இந்த இடங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் கூட்டமைப்பு புகார் கொடுத்தது. இதுகுறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி மத்திய சுகாதாரத் துறைக்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டது. இதனால், வெளிச்சத்துக்கு வந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசை விமர்சித்தனர்.
இதனையடுத்து, பாமக இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். 
இந்நிலையில் மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “மருத்துவ படிப்புக்கான இடங்களில்  50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். ஓபிசி, பிசி , எம்பிசி பிரிவினருக்கு இந்த இடங்களை ஒதுக்க வேண்டும். நடப்பாண்டிலேயே இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அகில இந்திய தொகுப்பில் 27 சதவீத இடத்தை ஓபிசி பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!