
Vaishali takes over PM Modi's social media: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக ஊடக கணக்குகளான 'X' மற்றும் இன்ஸ்டாகிராமை பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைத்த பெண்களுக்கு ஒரு நாள் முழுவதும் வழங்கியுள்ளார்.
பிரதமர் மோடி தனது 'மனதின் குரல்' நிகழ்ச்சியிலும் இது குறித்து பேசியிருந்தார். அதில் இந்த சாதனைப் பெண்கள் தங்கள் பணி மற்றும் அனுபவங்களை தனது இணைய ஊடக கணக்கில் பகிர்ந்து கொள்வார்கள் என்று கூறியிருந்தார்.
பிரதமர் மோடி ஊடக கணக்கை பெண்களுக்கு வழங்கினார்
பல்வேறு துறைகளில் பெண்களின் அதிகரித்து வரும் பங்களிப்பை பிரதமர் மோடி பாராட்டியதுடன், பெண்களின் அசைக்க முடியாத உணர்வை நாம் கொண்டாட வேண்டும் மற்றும் அவர்களை மதிக்க வேண்டும் என்றும் கூறினார். பிரதமர் மோடியின் சமூக ஊடக எக்ஸ் கணக்கை கையாளும் வாய்ப்பு சதுரங்க விளையாட்டு வீராங்கனை வைஷாலிக்கு கிடைத்துள்ளது.
வைஷாலி சமூக ஊடகத்தில் பகிர்ந்த பதிவு
அவர் நரேந்திர மோடியின் கணக்கில் ஒரு பதிவைப் பகிர்ந்து, “நான் வைஷாலி. நம் பிரதமர் மோடி அவர்களின் சமூக ஊடக கணக்குகளை பெண்கள் தினம் அன்று கையாள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்களில் பலருக்குத் தெரியும், நான் சதுரங்கம் விளையாடுகிறேன், மேலும் பல போட்டிகளில் எங்கள் அன்பான நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.” என்று கூறியுள்ளார்.
யார் இந்த வைஷாலி?
22 வயதான செஸ் கிராண்ட் மாஸ்டரான வைஷாலி தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்தவர். கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற முதல் தமிழ் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற 3வது பெண் என்ற பெருமையை பெற்றார். 14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 12 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் உலக இளைஞர் சதுரங்க சாம்பியன் பட்டத்தை வைசாலி வென்றுள்ளார். வைசாலி கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.