நிர்பயா வழக்கில் இனி யாரும் தப்பமுடியாது... உறுதியானது தூக்கு தண்டனை..!

By vinoth kumarFirst Published Dec 18, 2019, 2:03 PM IST
Highlights

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி அக்‌ஷய் குமார் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது. 

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி அக்‌ஷய் குமார் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது. 

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பா் 16-ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு 6 பேர் கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இக்கொடூர செயலில் ஈடுபட்ட 6 பேரில் ஒருவா் சிறார் ஆவார். சீர்திருத்த இல்லத்தில் 3 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த அவர், பின்னர் விடுவிக்கப்பட்டார். மீதமுள்ள 5 பேரில் ராம் சிங் என்பவா் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். 

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதில் 3 குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், 4-வது குற்றவாளி அக்‌ஷய் குமார் தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்தார். 

இதனிடையே, நிர்பயா பாலியல் வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விலகியதால் இந்த வழக்கு இன்று விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, அஷோக் பூஷன், போபண்ணா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அக்‌ஷய் குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், நிர்பயா பலாத்கார வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தப்படவில்லை. அக்சய்குமார் அப்பாவி. எங்களது தரப்பு வாதங்களை கேட்கவில்லை. அரசியல் காரணமாக தூக்கில் போடப்படுகிறார். ஊடகம், பொது மக்கள் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக தூக்கில் போட நெருக்கடி கொடுக்கப்படுகிறது எனக்கூறினார். இந்த சீராய்வு மனு மீதான தீர்ப்பை 1 மணிக்கு ஒத்திவைத்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பில், கொடுத்த தீர்ப்பை சீராய்வு செய்ய அவசியம் உள்ளதாக தோன்றவில்லை. ஆகையால், இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதனையடுத்து, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது. 

click me!