சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாகக் கூறி, மத்திய அரசுக்கு எதிராக தொடரப்பட்ட 14 வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அரசியல்வாதிகளை குடிமக்களை விட உயர்ந்த பீடத்தில் அமர்த்த முடியாது என்றும், அவர்களைக் கைது செய்வதில் இருந்து சட்டப்படி விலக்கு பெற முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாகவும், புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து எதிர்காலத்திற்கான வழிகாட்டுதல்களைக் கோரியும் 14 அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனு புதன்கிழமை தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் மற்றும் ஜே பி பார்திவாலா ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, "நீங்கள் குறிப்பிட்ட வழக்குகளைக் கொண்டுவருகிறீர்கள். நாங்களும் அதை கவனிக்கிறோம். ஆனால் சில புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சுருக்கமான சட்டத்தை உருவாக்கிவிட முடியாது. உண்மைகள் இல்லாமல் பொதுவான வழிகாட்டுதல்களை வைப்பது மிகவும் ஆபத்தானதாக இருக்கும். சட்டத்தின் பொதுவான கொள்கைகளை வகுக்க எங்களுக்கு உண்மைகள் தேவை" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
பாதிக்கப்பட்ட தனிப்பட்ட அரசியல்வாதிகள் தகுந்த தீர்வுக்காக நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறிய அமர்வு, "அரசியல்வாதிகளும் குடிமக்கள்தான். அவர்கள் மட்டும் எந்த உயர்ந்த பாதுகாப்பையும் அனுபவிக்க முடியாது" என்றும் கூறியது. எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களுக்கு எதிரான சிபிஐ / அமலாக்கத்துறை வழக்குகளில் உள்நோக்கம் இருப்பதாக எதிர்ப்பின் வாதிட்டால், அதற்கான பதிலை அரசியல் களத்தில்தான் தேடவேண்டும், நீதிமன்றங்களில் அல்ல எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது.
அரசியல் கட்சிகளுக்காக வாதிட்ட வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்னோக்கிப் பயன்படுத்த அரசியல் கட்சிகள் கோரவில்லை என்பதை முன்வைத்து வாதாடினார். ஆனால், நீதிமன்றத்தை நம்பத்தகுந்த ஆதாரங்களை முன்வைக்கத் தவறியதால், அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 14 மனுக்களையும் வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தார். இதனையடுத்து நீதிமன்றம் 14 மனுக்களும் வாபஸ் பெற்றப்பட்டதாக வழக்கைத் தள்ளுபடி செய்தது.