
கேரள மாநிலம் எடப்பள்ளி – மன்னுத்தி இடையேயான தேசிய நெடுஞ்சாலை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குண்டும் குழியுமாக சாலை காணப்படுவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இந்த சாலையில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசல் உருவாகி வருகிறது.
திருச்சூர் மாவட்டத்தின் பளியெக்கரா பகுதியில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்து வந்தது. ஆனால், “சாலை இவ்வளவு மோசமாக இருக்கும்போது பொதுமக்களிடம் சுங்கம் வசூலிப்பது நியாயமா?” என்ற கேள்வி எழுந்ததால், அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், “சாலை பராமரிப்பு மிக மோசமாக உள்ளது. சுங்கம் செலுத்தும் மக்கள் பாதுகாப்பான, சீரான சாலையில் பயணம் செய்ய வேண்டும். வேண்டும். அதுதான் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கடமை” என்று வலியுறுத்தியது. மேலும், பளியெக்கரா சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க 4 வாரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது, தலைமை நீதிபதி, “சமீபத்தில் 65 கி.மீ தூரத்தை கடக்க 12 மணி நேரம் எடுத்தது என்பது மிகப் பெரிய சிக்கல். முடிவடைய வேண்டியது. இப்படி இருக்கும் போது பொதுமக்களிடம் ரூ.150 சுங்கக் கட்டணம் எதற்காக?” என்று கடுமையாக கேள்வி எழுப்பினார்.
மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் தொடர்ச்சியான நெரிசல்கள், மேடுகள், பள்ளங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திறமையின்மையை வெளிப்படுத்துகின்றன என்றும் நீதிபதி விமர்சித்தார்.
இறுதியாக, உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மேல்முறையீட்டை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், மோசமான சாலைக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க முடியாது என்ற சட்டபூர்வ நிலைமை உறுதியாகியுள்ளது.