சபாநாயகரின் அதிகாரத்தை மறுஆய்வு செய்யுங்கள்: நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

By Asianet TamilFirst Published Jan 22, 2020, 5:59 PM IST
Highlights

எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் மனுமீது சபாநாயகர் முடிவு எடுக்கும் அதிகாரம் குறித்து நாடாளுமன்றம் மறுஆய்வு வேண்டும், அதேசமயம் தகுதி நீக்க மனுவை நீண்டகாலத்துக்கு சபாநாயகர் கிடப்பில் போட முடியாது, குறிப்பிட்ட காலக்கெடுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் சேர்ந்து அமைச்சராகினார். அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சி மனு அளித்தபோது அவர் அதற்கு மறுத்துவிட்டார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 28 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 21 எம்எல்ஏக்களும் உள்ளனர். இதில் பாஜக, என்பிபி கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏ தோனோஜம் ஷியாம் குமார் பாஜகவில் சேர்ந்தார். அவரை ஏற்றுக்கொண்ட பாஜக, அவருக்கு அமைச்சர் பதவி வழங்கியது. தற்போது மணிப்பூரில் வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருக்கிறார். கட்சி மாறிய ஷியாம் குமாரை எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சி மனு அளித்தது.

ஆனால், சபாநாயகர் ஷியாம் குமாரைத் தகுதி நீக்கம் செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து, ஷியாம் குமாரைத் தகுதி நீக்கம் செய்யச் சபாநாயகருக்கு உத்தரவிடக்கூறி காங்கிரஸ் கட்சி சார்பில் எம்எல்ஏ பஜூர் ரஹ்மான், கே. மேகச்சந்திரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எப். நாரிமன் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நாரிமன் கூறுகையில், " இந்த விஷயத்தில் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடனும், நியாயமாகவும் செயல்பட வேண்டும். எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தகுதி நீக்கம் குறித்து சபாயநாகர் முடிவு எடுப்பதற்குப் பதிலாக, சுயாட்சி அதிகாரம் கொண்ட, நிலையான அமைப்பின் மூலம் முடிவு எடுக்கத் தகுதியான அமைப்பை நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும்.


தகுதி நீக்கம் குறித்த மனுவைச் சபாநாயகர் காலவரையின்றி முடிவு செய்யாமல் அமர்ந்திருக்க முடியாது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் , நியாயமான காரணங்களுக்குள் சபாநாயகர் தகுதிநீக்க மனு மீது முடிவு எடுக்க வேண்டும். அதிகபட்சமாக 3 மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும். ஆதலால் இந்த தகுதிநீக்க மனுமீது மணிப்பூர் சபாநாயகர் அடுத்த 4 வாரங்களுக்குள் முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்

click me!