முல்லை பெரியாறு அணை விவகாரம்.. சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

By karthikeyan VFirst Published Aug 16, 2018, 4:35 PM IST
Highlights

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 138 அடியாக குறைக்க முடியுமா? தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், அணையின் நிலவரம், இயற்கை பேரிடர் நடவடிக்கைகள் குறித்து நாளை பதிலறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய கண்காணிப்பு குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 138 அடியாக குறைக்க முடியுமா? தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், அணையின் நிலவரம், இயற்கை பேரிடர் நடவடிக்கைகள் குறித்து நாளை பதிலறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய கண்காணிப்பு குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் அம்மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து, உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த அணையின் பராமரிப்புப் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருவதால், நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.

கேரள முதல்வரின் கடிதத்திற்கு தமிழக முதல்வர் பழனிசாமி பதில் கடிதம் எழுதினார். அதில், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. முல்லை பெரியாறு அணையில் 142 நீர் தேக்கப்படுவதால் அணையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கிடையாது. முல்லை பெரியாறு அணையிலிருந்து அதிகபட்ச நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் அளவு குறித்து தமிழக அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறு அணைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதில் எழுதினார். 

இதற்கிடையே, கேரளாவில் வெள்ளத்தால் நிலைமை மோசமடைந்துள்ளதால், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கக்கோரி இடுக்கி பகுதியை சேர்ந்த ரசூல் ஜாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது, அணையின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்பிய மனுதாரர் தரப்பை, ஆதாரங்கள் இல்லாமல் சந்தேகம் எழுப்பக்கூடாது என உச்சநீதிமன்றம் கண்டித்தது. அணை பாதுகாப்பாகவே உள்ளதாகவும் எந்த பயமும் இல்லை என தமிழக அரசு தரப்பில் கருத்து முன்வைக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைத்தால் கேரளாவில் நிலைமையை ஓரளவிற்கு சமாளிக்க முடியும் என கேரள அரசு சார்பில் வாதிடப்பட்டது. 

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 138 அடியாக குறைக்க முடியுமா? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. மேலும் முல்லைப் பெரியாறு அணையின் நிலவரம், தண்ணீர் திறப்பு, இயற்கை பேரிடர் நடவடிக்கைகள் குறித்து நாளை விரிவான அறிக்கை தர துணைக் கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.
 

click me!