பன்முக கலாச்சாரம் கொண்ட இந்தியாவில் வெறுக்கத்தக்க பேச்சு என்பது குற்றம்..! சுப்ரீம் கோர்ட் அதிரடி

By karthikeyan VFirst Published Dec 8, 2020, 9:17 AM IST
Highlights

வெறுக்கத்தக்க பேச்சு குற்றச்செயல் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், பேச்சு சுதந்திரத்திற்கும் வெறுக்கத்தக்க பேச்சுக்கும் இடையிலான வித்தியாசத்தை வரையறுத்துள்ளது.
 

வெறுக்கத்தக்க பேச்சு குற்றச்செயல் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், பேச்சு சுதந்திரத்திற்கும் வெறுக்கத்தக்க பேச்சுக்கும் இடையிலான வித்தியாசத்தை வரையறுத்துள்ளது.

அமிஷ் தேவ்கன் vs இந்திய அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, வெறுப்புரை(வெறுக்கத்தக்க பேச்சு) குறித்த விரிவான விவாதமாக அமைந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர் மற்றும் சஞ்சய் கண்ணா அமர்வு வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசத்தை விளக்கியதுடன், வெறுக்கத்தக்க பேச்சை குற்றம் என்று கூறியதுடன், அதை கண்டுபிடித்து அடையாளப்படுத்துவதற்கான விஷயங்களையும் தெளிவுபடுத்தியுள்ளது.

பன்முகத்தன்மையை வலியுறுத்தும் அரசியலமைப்பு கொண்ட நாட்டில், வெறுக்கத்தக்க பேச்சு எந்தவிதத்திலும் ஜனநாயகத்திற்கு உதவாது. சம உரிமை என்ற தத்துவத்திற்கே எதிரானது அது என்று நீதிபதி சஞ்சய் கண்ணா தெரிவித்தார்.

வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் சுதந்திரமான பேச்சு:

வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் சுதந்திரமான பேச்சு ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசத்தையும் வரையறையையும் தெளிவுபடுத்து அவசியம் என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் திட்டங்களையும் கொள்கைகளையும் ஆரோக்கியமான முறையில் விமர்சிப்பதும், அவை குறித்த கருத்துகளை சொல்வதும் பேச்சு சுதந்திரம். ஆனால் வெறுக்கத்தக்க பேச்சு(வெறுப்புரை) என்பது ஒரு குழு அல்லது அமைப்புக்கு எதிராக தொடர்ச்சியாக அவதூறுகளையும் பரப்புவது ஆகும். சுதந்திரமான பேச்சு என்பது அரசியல், சமூக, பொருளாதார விவகாரங்கள் மற்றும் கொள்கை, திட்டங்கள் ரீதியான விவகாரங்கள் தொடர்பாகவே இருக்கும். ஆனால் வெறுப்புரையின் பிரதான நோக்கம், குறிப்பிட்ட சிலரை அல்லது ஒரு அமைப்பை அவமானப்படுத்துவதும், அந்நியப்படுத்துவதுமே ஆகும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறுப்புரையை குற்றச்செயல் என்று உச்சநீதிமன்றம் கூறுவது, தனிமனித கண்ணியத்தையும், அரசியல் மற்றும் சமூக சமத்துவத்தையும் காக்கவுமே ஆகும். குறிப்பிட்ட குழுவை டார்கெட் செய்து அவர்களின் கண்ணியத்திற்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலான வெறுக்கத்தக்க பேச்சு, பன்முக கலாச்சாரம் கொண்ட சமத்துவ கொள்கையை கொண்ட ஒரு நாட்டில், வேற்றுமை, சகிப்பின்மை ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.

கண்ணியத்துடன் வாழ்வது என்பது, அரசியலமைப்பு சட்டம், தனிமனிதனுக்கு கொடுத்த அடிப்படை உரிமை. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கும் அது அவசியம். எனவே வெறுக்கத்தக்க பேச்சு குற்றச்செயல் என்று வரையறுத்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். 
 

click me!