
இறைச்சிக்காக சந்தையில் மாடுகளை விற்கவும், வாங்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
தடை உத்தரவு
இறைச்சிக்காக கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்வதற்கு தடைவிதித்து கடந்த மாதம் 23-ம் தேதி மத்திய அரசு புதிய அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டது.
எதிர்ப்பு
விலங்குகள் வதைச் சட்டத்தில் திருத்தமும் கொண்டு வந்தது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று, சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தடை
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
மனுத்தாக்கல்
இந்நிலையில், இறைச்சிக்காக மாடு விற்பனை செய்ய தடை என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
இதில் ஐதராபாத்தைச் சேர்ந்த முகம்மது அப்துல் பாகீம் குரோஷி என்பவர் கடந்த 7-ந்தேதி மனுத் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் குறிப்பிட்டு இருப்பதாவது-
உரிமை பறிப்பு
இறைச்சிக்காக சந்தையில் மாடு விற்பனை செய்ய தடை என்ற மத்திய அரசின் உத்தரவு என்பது, மதத்துக்காக விலங்குகளை பலியிடலாம் என்ற சுதந்திரத்துக்கு எதிராக இருக்கிறது. இறைச்சிக்காக கொல்லக்கூடாது என்பது ஒருவரின் உணவு உண்ணும் உரிமையை மீறுவது போல் இருக்கிறது, அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியக் குடிமகனுக்கு அளித்துள்ள தனிநபர் சுதந்திரத்தையும் மீறுகிறது.
அடையாளம்
இறைச்சிக்காக விலங்குகளை பலியிடுவதும், விலங்குகளை பலியிட்டு அதை சமைத்து சாப்பிடுவதும், மதத்துக்காக பலியிடுவதும் சில சமூகங்களின் அடையாளமாகும். இது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 29-ன் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது.
பொருளாதார சுமை
மேலும், மாடு, ஒட்டகங்களை முழுமையாக இறைச்சிக்காக விற்க, வாங்க தடை விதிப்பது என்பது விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார சுமையை ஏற்படுத்தும். தங்களின் குழந்தைகளுக்கே உணவு அளிக்க சிரமப்பட்டு இருக்கும் மாடு வர்த்தகர்களுக்கு இந்த உத்தரவு கடினமானதாகும்.
சட்டம் இல்லை
உணவுக்காக விலங்குகளைக் கொல்வது, மதச் சடங்குகளுக்காக பலியிடுவது, விற்பனை செய்வது ஆகியவற்றுக்கு தடை விதித்தோ அல்லது கட்டுப்பாடுகள் விதித்தோ நாடாளுமன்றம் மூலம் சட்டம் கொண்டு வரப்படவில்லை. 1960ம் ஆண்டு விலங்குகள் வதைச்சட்டத்திலும் இது குறிப்பிடப்படவில்லை.
சட்டவிரோதமானவே
ஆதலால், விலங்குகள் வதைச்சட்டத்தில் உள்ள விதிகள், விலங்குகளை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தலில் உள்ள விதிகளை சட்டவிரோதமானவை என அறிவிக்க வேண்டும்.
மத்தியஅரசின் இந்த உத்தரவு மூலம், இறைச்சி வெட்டுவோரின் வாழ்வாதாரமும், வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
விசாரணை
இந்த மனு நீதிபதிகள் ஆர்.கே. அகர்வால் மற்றும் எஸ்.கே. கவுல் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல்சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ். நரசிம்மா வாதிடுகையில், “ நாடுமுழுவதும் கால்நடைகள் விற்பனையை ஒழுங்குபடுத்தவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது’’ என்றார்.
நோட்டீஸ்
ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், அடுத்த 2 வாரங்களுக்குள்மத்தியஅரசு பதில் மனுத் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஜூலை 11ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.