உச்ச நீதிமன்றத்தை விபசாரத்துடன் ஒப்பிட்ட வீடியோ: ‘நோ ப்ராப்ளம்’ - தலைமை நீதிபதி!

By Manikanda Prabu  |  First Published Aug 4, 2023, 1:05 PM IST

உச்ச நீதிமன்றத்தை விபசாரத்துடன் ஒப்பிட்ட வீடியோ தொடர்பாக கவலைப்பட வேண்டியதில்லை என தலைமை நீதிபதி  தெரிவித்துள்ளார்


உச்ச நீதிமன்றத்தை விபச்சாரத்துடன் தொடர்புப்படுத்தி ஒப்பிடும் ஆட்சேபனைக்குரிய வீடியோ சமூக ஊடக தளங்களில் பரவி வருவதாக வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டாட். ஆனால், அது ஒரு பொருட்டே அல்ல என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர் ஒருவர், உச்ச நீதிமன்றத்தை விபச்சாரத்துடன் தொடர்புப்படுத்தி ஒப்பிடும் ஆட்சேபனைக்குரிய வீடியோ பற்றி முறையிட்டார்.

Latest Videos

இதுகுறித்து அந்த வழக்கறிஞர் கூறுகையில், “மிக முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அதனை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். உச்ச நீதிமன்றத்தை விபச்சார விடுதியுடன் ஒப்பிட்டு, நீதிபதிகளை ஊழல்வாதிகள் என கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை நான் ஏற்கனவே பதிவாளரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.” என முறையிட்டார்.

அப்போது, ‘அதுபற்றி கவலைப்பட வேண்டாம்; அது முக்கியமல்ல’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். ஆனால், மணிப்பூர் வன்முறை விவகாரம் தொடர்பான விசாரணைக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தைப் பற்றி ஆட்சேபகரமான வார்த்தைகள் வீடியோவில் கூறப்பட்டுள்ளதாக அந்த வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

I.N.D.I.A கூட்டணி பெயர்: டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

அதற்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘எந்த பிரச்சனையும் இல்லை. அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்’ என பதிலளித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த கருத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும்  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!