தேர்தல் பத்திரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று அளித்துள்ளது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமித்த தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி வழங்குவதை அனுமதிக்கும் மத்திய அரசின் தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது உள்ள தேர்தல் பத்திர முறை தகவல் அறியும் உரிமையை மீறும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை ஒருமனதாக வழங்கியிருக்கிறது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
* தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் 2019ஆம் ஆண்டு முதல் ஸ்டேட் வங்கி இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியவர்கள் குறித்த விவரத்தை வெளியிட வேண்டும்.
* அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திரங்களின் விவரங்களை ஸ்டேட் வங்கி இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் ஸ்டேட் வங்கி அளிக்கும் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
* 15 நாட்களுக்குள் செல்லுபடியாகக்கூடிய மற்றும் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகள் அந்தந்த தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடம் திரும்பச் செலுத்த வேண்டும்.
ஏ.டி.எம். போகவே தேவையில்ல... விர்சுவல் ஏ.டி.எம். மூலம் ஈஸியா பணத்தை எடுப்பது எப்படி?
* நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள் முற்றிலும் ஆதாயம் பெறும் நோக்கங்களுக்காக மட்டுமே என்பதால், தேர்தல் பத்திரங்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் அளித்த நிதி பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.
* "அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வரம்பற்ற பங்களிப்புகளை வழங்க அனுமதிப்பது, தேர்தல் சமநிலையை மீறிவதாகும்" என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
* அரசியல் கட்சிகள் தேர்தல் செயல்பாட்டில் தொடர்புடைய அமைப்புகள் என்றும், அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி செய்பவர்கள் பற்றிய தகவல்கள் அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
* நிதி அளிப்பவர்கள் பற்றிய விவரங்களைக் குறிப்பிடாத தேர்தல் பத்திரங்கள் அரசியல் சானத்தின் பிரிவு 19(1)(a) இன் கீழ் தகவல் அறியும் உரிமையை மீறுவதாகவும் உச்ச நீதிமன்றம் கூறுகிறது.
தேர்தல் பத்திர முறை
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.
2018ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி மத்திய அரசால் தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நிதியின் வெளிப்படைத்தன்மையை அறிய இந்த பத்திரங்கள் வழிவகுக்கும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.
தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள், கட்சியினர் தங்களது அடையாளங்களை வெளிப்படுத்தாமல், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கு வசதியாக இந்தத் தேர்தல் பத்திரத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் நிறுவனமும் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். இந்த பத்திரங்கள் ரூ. 1,000 முதல் ரூ 1 கோடி வரை பல்வேறு மதிப்புகளில் கிடைக்கின்றன. இந்த பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அனைத்து கிளைகளிலும் பெறலாம். இந்த நன்கொடைகளுக்கு வட்டியும் விதிக்கப்படாது.